தமிழகத்தில் களமிறங்கும் ஓவைசி... திமுகவுக்கு அடுத்தடுத்து வரும் சோதனை..!

By Thiraviaraj RMFirst Published Dec 15, 2020, 11:04 AM IST
Highlights

ஓவைசி தனியாக களமிறங்கினால் அதன் பாதிப்பு திமுகவுக்கு நிச்சயம் ஏற்படும் என்பதே உண்மை. 

கூட்டணி வைக்க, தமிழக கட்சிகள் முன்வந்தால் சேர்க்கத் தயார் என ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சித் தலைவர் அசதுதீன் ஓவைசி கூறியுள்ளார்.

ஓவைசி, தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலில் இம்முறை 30 தொகுதிகளிலாவது போட்டியிட முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. திருச்சியில் நடந்த கட்சி கூட்டத்தில், இதுகுறித்து அறிவிக்கப்பட்டது. இருப்பினும், முஸ்லிம் ஓட்டுகளை அதிகம் பெறும், தி.மு.க.,வுடன் கூட்டணி வைக்க, ஓவைசி முடிவு செய்துள்ளாரா என்பது குறித்தும், கமல் மற்றும் சீமான் ஆகியோருடன் கூட்டணி வைக்க, ஓவைசி தயாராகி விட்டாரா? என்ற சந்தேகம் குறித்தும், தமிழகத்தில் உள்ள முஸ்லிம் அமைப்புகளுக்கோ, 'மூன்றாம் கூட்டணி' என்ற அறிவித்துள்ள கமலுக்கோ, 'நாம் தமிழர்' என்ற கட்சி நடத்தும் சீமானுக்கோ தெரியவில்லை.

தனியார் நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில், ’’தமிழகத்தில் கூட்டணி அமைக்க, கமல் மற்றும் சீமான் ஆகியோருடன், நான்பேசவில்லை; பேசியதாக, வேகமாக வதந்தி பரவி வருகிறது. இந்த நிமிடம் வரை, எந்த தலைவருடனும் பேசவில்லை என்பதால், தனியாகத்தான் உள்ளோம். கூட்டணி உருவாக்க யாரும் வேண்டுகோள் விடுத்து முன்வந்தால், தாராளமாக சேர்த்துக் கொள்வேன்.

காங்கிரஸ் அங்கம் வகிக்கும் கூட்டணியில் சேர மாட்டோம் என அறிவுறுத்தவில்லை. எல்லா கட்சிகளுக்கும், கதவுகள் திறந்தே இருக்கின்றன. தமிழகத்தில், எவ்வளவு தொகுதிகளில், போட்டியிட வேண்டும் என இன்னும் முடிவு செய்யவில்லை. கட்சியின் தமிழக நிர்வாகிகளுடன் பேசி, கள நிலவரம் அறிந்த பின், தீர்க்கமாக முடிவு செய்து, களம் இறங்குவோம்.

இப்போது தானே, தேர்தல் களம் சூடுபிடிக்கத் துவங்குகிறது. தமிழக நிர்வாகிகளை அழைத்து பேசி, கூட்டணி, தொகுதிகள், வேட்பாளர் என, எல்லாவற்றையும் தீர்மானிக்க நேரம் இருக்கிறது; பிறகு சொல்கிறேன்’’என அவர் தெரிவித்தார். தமிழகத்தில் கூட்டணி அல்லாமல், தனியாகப் போட்டியிட ஓவைசி களம் இறங்கினால், மற்ற முஸ்லிம் கட்சிகளும், அமைப்புகளும், தி.மு.க.,வுடனோ, அ.தி.மு.க.,வுடனோ கூட்டணி அமைக்க வேண்டி இருக்கும்.

முஸ்லிம் சமுதாயத்தின் ஒட்டுமொத்த குரலாய் பார்லிமென்டில் ஒலிக்கும் ஓவைசியின் பக்கம், அனைத்து முஸ்லிம்களும் திரும்புவர்களா? அல்லது தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கு ஓட்டு போடுவார்களா? என்பதை, பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். ஆனால், ஓவைசி தனியாக களமிறங்கினால் அதன் பாதிப்பு திமுகவுக்கு நிச்சயம் ஏற்படும் என்பதே உண்மை. 

click me!