சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி தான்... நிர்வாகிகளுக்கு கமல் அளித்த பூஸ்ட்..!

By Selva KathirFirst Published Nov 3, 2020, 12:59 PM IST
Highlights

அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் வர உள்ள நிலையில் தற்போதே அதற்கான பணிகளை தொடங்க மக்கள் நீதி மய்யம் ஆயத்தமாகி வருகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு முன்னதாகவே தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க கமல் முடிவெடுத்துள்ளார்.

சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி அமைத்தே மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் என்று நிர்வாகிகளிடம் கமல் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் வர உள்ள நிலையில் தற்போதே அதற்கான பணிகளை தொடங்க மக்கள் நீதி மய்யம் ஆயத்தமாகி வருகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு முன்னதாகவே தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க கமல் முடிவெடுத்துள்ளார். இதற்காக அனைத்து வசதிகளுடனும் கூடிய சிவப்பு நிற பிரச்சார வேன் கூட தயாராகிவிட்டது. 234 தொகுதிகளிலும் பிரச்சாரத்திற்கான வியூகத்தை மக்கள் நீதி மய்யம் கட்சி செய்து வைத்துள்ளது.

இது குறித்து விவாதிக்கவே அனைத்து மாவட்ட நிர்வாகிகள், மண்டல நிர்வாகிகளை கமல் அழைத்துள்ளார். சுமார் 800 பேருககு இந்த கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு சமார் 250 பேர் என மூன்று நாட்களுக்கு இந்த கூட்டம் சென்னையில் உள்ள ஜிஆர்டி கிராண்ட் நட்சத்திர ஓட்டலில் நடைபெற உள்ளது. முதல் நாள் கூட்டத்திற்கு அழைக்கப்பட்ட அனைத்து நிர்வாகிகளும் தவறாமல் வந்துவிட்டனர். கமலும் கூட்டம் தொடங்குவதற்கான நேரத்திற்கு சரியாக ஓட்டலுக்கு வந்து சேர்ந்தார்.

வழக்கம் போல் அனைவருக்கும் வணக்கம் தெரிவித்துவிட்டு பேசிய கமல், சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்தே போட்டி என்பதை முதலிலேயே சொல்லிவிட்டதாக கூறுகிறார்கள். எந்தெந்த தொகுதிகள் நமக்கு சாதகமாக இருக்கும் யாருடன் கூட்டணி வெற்றி வாய்ப்பை அதிகமாக்கும், மூன்றாவது அணி என்றால் எந்தெந்த கட்சிகளை சேர்க்கலாம் என்பன உள்ளிட்ட சில ஆலோசனைகளை கமல் கேட்டதாகவும் அதற்கு நிர்வாகிகள் பலரும் திமுக, அதிமுகவுடன் கூட்டணி வேண்டாம் என்று கூறியதாக சொல்கிறார்கள்.

அதே சமயம் காங்கிரசுடன் கூட்டணி அமைக்கலாம் என்றும் பாமகவுடன் பேசலாம் என்றும் சீமான் வந்தால் சேர்த்துக் கொள்ளலாம் என்றும் கட்சி நிர்வாகிகள் ஆளுக்கு ஒரு தகவலை கூறியுள்ளனர். இவை அனைத்தையும் பொறுமையாக கேட்டுக் கொண்ட கமல் வெற்றிக் கூட்டணி என்றால் அது திமுக அல்லது அதிமுகவாகத்தான் இருக்கும், அந்த இரண்டு கட்சிகளில் நாம் யாருடன் கூட்டணி வைக்கலாம் என்று வெளிப்படையாக கேட்ட போது அங்கு மவுனமே பதிலாக இருந்ததாக சொல்கிறார்கள்.

கூட்டணி குறித்து தன்னிடம் ஆறு மாத காலமாகவே கிட்டத்தட்ட அனைத்து கட்சிகள் தரப்பில் இருந்தும் பேசுவதாகவும் நமக்கு எது சரியாக இருக்குமோ அதனை நாம் தேர்வு செய்து கொள்ளலாம் என்றும் தேர்தல் வரை அதற்கு பொருத்திருக்கு வேண்டும் என்றும் கமல் கூறியதாக சொல்கிறார்கள். மேலும் பிரச்சாரத்தை பொறுத்தவரை 234 தொகுதிகளிலும் தான் பேசுவதற்கான ஏற்பாட்டை செய்ய வேண்டும் என்றும் அந்தந்த தொகுதிகளில் என்னென்ன பிரச்சனை என்பதை முன்கூட்டியே கட்சி தலைமையகத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்றும் கமல் கூறியுள்ளார்.

மேலும் மாநில அளவிலான பொதுப்பிரச்சனைகள் என்பதை தாண்டி தொகுதிவாரியாக என்ன பிரச்சனை என்பதை அறிந்து அந்த பிரச்சனையை சரி செய்வதாக வாக்குறுதி அளித்து மக்களை சந்திக்க வேண்டும் என்று கமல் அறிவுறுத்தியதாகவும் கூறுகிறார்கள். இதே போல் மேலும் 2 நாட்கள் நடைபெற உள்ள ஆலோசனையின் போது கமல் தனது மனதில் உள்ள அனைத்தையும் கூறுவார் என்றும் அதன் பிறகே தேர்தலில் மக்கள் நீதி மய்யம் என்ன முடிவு எடுக்கப்போகிறது என்பதை யூகிக்க முடியும் என்கிறார்கள்.

எந்த கட்சியுடன் வேண்டுமானாலும் கூட்டணி என்று கமல் கூறியிருப்பது நிர்வாகிகளை நாடித்துடிப்பை அறியத்தானே தவிர அது நிதர்சனம் இல்லை என்றும் சொல்கிறார்கள். கமல் 3வது அணியை அமைத்து ஸ்டாலினை முதலமைச்சராக்காமல் தடுக்கவே முயல்வார் என்றும் கூறுகிறார்கள்.

click me!