ஜெயலலிதா இல்லாத சட்டசபை..!!! - NEWSFAST அலசல்

Asianet News Tamil  
Published : Feb 03, 2017, 04:46 PM ISTUpdated : Sep 19, 2018, 03:03 AM IST
ஜெயலலிதா இல்லாத சட்டசபை..!!! - NEWSFAST அலசல்

சுருக்கம்

ஜெயலலிதா இல்லாத சட்டசபை கம்பீரதை இழந்துவிட்டது என்ற விஜயதரனியின் வார்த்தையில்தான் இதை தொடங்கவேண்டும்.

சட்டசபைக்கு தொடர்ச்சியாக செல்லும் யாரும் ஜெயலலிதா இருந்த காலத்தையும் தற்போதைய சட்டசபையையும் ஒப்பிட்டு பார்க்காமல் இருக்க மாட்டார்கள்.

வகுப்பறையில் தலைமை ஆசிரியரே வந்து அமர்ந்திருந்தால் மாணவர்கள் எந்த மனநிலையில் இருப்பர்களோ அந்த மனநிலையில் உறுப்பினர்கள் இருந்த காலம் அன்று.

ஆசிரியரே இல்லாத வகுப்பறை மாணவர்கள் போன்று ரிலாக்ஸ் மூடில் உறுப்பினர்கள் இருப்பது இன்று.

ஜெ கலந்து கொண்ட கடைசி சட்டமன்ற நிகழ்வு பெரும் பரபரப்போடு முடிந்தது.

கச்சதீவு பிரச்சனை, மதுவிலக்கு பிரச்சனை இரண்டிலும் திமுகவினரை கடுமையாக தன்னுடைய வாதத்தால் வீழ்த்தினார் ஜெயலலிதா.

அவருக்கு பதில் சொல்லமுடியாமல் வெளிநடப்பு செய்தபோதும் அவர்களை விடாமல் திமுகவினரை நாமாக வெளியேற்ற வேண்டாம் கச்சதீவு, மதுவிலக்கு பிரச்சனை இரண்டில் எதை பேசினாலும் தானாகவே வெளியேறி விடுவகர்கள் என்று வேடிக்கையாக குறிப்பிட்டார்.

ஜெயலலிதா இருந்த காலகட்டத்தில் அடிக்கடி எழும் மோதல்களால் சட்டசபையே பரபரப்பாக இருக்கும்.

எந்த ஒரு சின்ன விசயத்தையும் திமுகவினர் வாதத்தால் வென்றார்கள் என்று விடமாட்டார்.

இளம் உறுப்பினர் டிஆர்பி ராஜா ஒரு பிரச்சனையை எழுப்ப அப்போதுதான் சட்டசபைக்குள் வந்த ஜெயலலிதா உடனடியாக அவரை மடக்க தான் தப்பிப்பதற்காக திடீரென ஆங்கிலத்துக்கு மாறி அடுக்கடுக்காக பேச இதை கண்டு ஜெயலலிதா திணறிப்போவார் என்று ராஜா நினைத்தபோது அதே வேகத்தில் எழுந்த ஜெ "மை டியர் யங் மேன்.. என்னிடம் வார்த்தைகளில் விளையாட வேண்டாம்" என்று சிரித்தபடியே கூறினார்.

தன்னுடைய நிலையில் இருந்து இறங்கி வராமல் அன்பு கலந்த கண்டிப்போடு ராஜாவை கண்டித்தார்.

இதே போன்று கண்டிப்பானவர் என்று பெயரெடுத்தாலும் புதிய உறுப்பினர்களின் கன்னி பேச்சை வெகுவாக ரசிப்பார் ஜெயலலிதா.

அதே போல் பெண் உறுப்பினர்கள் பேச்சை அவர்களின் கோரிகையை மதிப்பு கொடுத்து கேட்பார்.

ஜெயலலிதாவின் நடவடிக்கைகளில் அதிகார தோரணை இருக்கும் என்று சொல்பவர்கள் கூட அவர் தரம் தாழ்ந்து விமர்சிக்க மாட்டார் என்பதை மறுக்க மாட்டார்கள்.

ஜெயலலிதா மரணமடைந்த பிறகு அவர் இல்லாமல் முதல் சட்டசபை கூட்டம் கடந்த வரம் நடைபெற்றது.

ஜெயலலிதா என்கிற இறுக்கம் விலகியது போல் உறுப்பினர்கள் ரிலாக்ஸ் மூடில் இருந்ததை பார்க்க முடிகிறது.

முதல்வர் ஓபிஎஸ் எதிர்கட்சி உறுப்பினர்களுக்கு மதிப்பு கொடுத்து பேசுவதும், இதுவரை ஆளுநர் உரை மீதான முதல்வர் பதிலுரையை அமர்ந்து கேட்காமல் வெளிநடப்பு செய்த திமுகவினர் முதன்முறையாக முதலமைச்சர் உரையை கேட்டதும் இதுவரை சட்டசபையில் இல்லாத நடைமுறை.

ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தவரை ஆளுநர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் பதிலுரையின் மீது ஜெ. பேச ஆரம்பித்தால் ஒரு குறுக்கீடும் இருக்காது.

ஆனால் முதல்வர் ஓபிஎஸ் ஆளுநர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் பதிலுரையின் பொது பல்வேறு குறுக்கீடுகள் இருந்தன.

எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின், துணை தலைவர் துரைமுருகன் எழுந்து அடிக்கடி குறுக்கிட்டு கேள்வி எழுப்பினர்.அதற்கு சபாநாயகர் அனுமதி அளித்தார். ஓபிஎஸ்சும் பதில் அளித்தார்.

இது புதிய நடைமுறையாக பார்க்கப்பட்டது. சபாநாயகர் தனபால் சபையை நடத்துவதிலும் வித்தியாசத்தை காணமுடிந்தது.

இதுவரை இருந்தது போல் இறுக்கமான மனநிலையில் இல்லாமல் அவரும் தன்னிச்சையாக சுயமாக செயல்பட்டதை காணப்பட்டது.

முதல்வர் ஓபிஎஸ் அவை முன்னவர் என்ற முறையில் மட்டுமே தனது அதிகார வரம்பை நிறுத்தி கொண்டதால் அவை தலைவர் தனபால் இலகுவாக செயல்பட்டார்.

எதிர்கட்சி தலைவர் ஸ்டாலினே பாராட்டும் அளவுக்கு அதிக நேரத்தை ஒதுக்கி கொடுத்தார்.

கடந்த முறை செய்கைகள் மூலம் கிண்டல் செய்த குசும்புக்கார எம்எல்ஏக்களான ரங்கநாதன், ஜெ.அன்பழகன் இருவரும் சபாநாயகரை சாதாரணமாக எடைபோட்டு விட்டோம் என்று என்னும் அளவுக்கு தனது பொறுப்பை கட்சிதமாக நிறைவேற்றினார் தனபால்.

ஒரு கட்டத்தில் ஸ்டாலின் பேசிய பேச்சை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று அமைச்சர் ஓ.எஸ் மணியன் "ஸ்டாலின் விஷத்தை கக்குகிறார்" என்று குறிப்பிட உடனடியாக அமைச்சரை கண்டித்த சபாநாயகர் வரம்பு மீறி பேசுகிறீர்கள். உங்கள் பேச்சை அவை குறிப்பில் இருந்து நீக்குகிறேன் என்று கூறி அமைச்சரின் பேச்சையே அவைக்குறிப்பில் இருந்து  நீக்கினார்.

 

பூங்கோதை ஆலடி அருணா கேட்ட கேள்விக்கு பதிலளித்த சட்ட அமைச்சர் சிவி சண்முகம் விமர்சனம் செய்ய, பின்னர் திமுக உறுப்பினர்கள் அமைச்சரோடு நேரடி விவாதத்தில் ஈடுபட அனைவரும் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட கொதித்தெழுந்த சபாநாயகர் அனைவரையும் இருக்கைக்கு திரும்ப கட்டளையிட்டார்.

அப்போது முறையிட்ட அமைச்சர் சிவி சண்முகத்திடம் நீங்களும் அமைச்சர் என்ற முறையில் நடந்து கொள்ள வேண்டும் , நீங்கள் என்னை பார்த்து தான் பேசவேண்டும் , திமுக உறுப்பினர்களுடன் எப்படி வாக்குவாதத்தில் ஈடுபடலாம் என்று கூறியதை திமுக உறுப்பினர்களே ஆச்சர்யமாக பார்த்தனர்.

மொத்தத்தில் எந்த வித அழுத்தமும் இல்லாதாதால்,சபாநாயகர் தன் பணியை நடுநிலையுடன் செயல்பட்டதை பார்க்க முடிந்தது.

கட்சிக்குள்ளேயே சிண்டு முடிக்கும் விதத்தில் "5 வருடம் நாங்கள் உங்களை ஆதரிக்கிறோம் உங்கள் பின்னால் இருப்பவர்கள் உங்களை கவிழ்க்காமல் இருந்தால் சரி" என்று துரைமுருகன் சட்டசபையில் பேசியது அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படாதது புதிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

சட்டசபையில் எதிர்கட்சி உறுப்பினர்களை வீண் வம்புக்கு இழுத்து தலைவியின் கவனத்தை பெற வேண்டும் என்று சபையின் நேரத்தை வீணடித்த உறுப்பினர்கள் கூட அமைதியாக விஷயத்தை மட்டும் பேசும் நிகழ்வுகளும் நடந்தது.

மொத்தத்தில் சட்டசபையே ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுத்து மக்கள் பிரச்னையை பேசும் மன்றமாக மாறக்கூடிய சூழ்நிலையை நோக்கி செல்வதை பார்க்கமுடிந்தது.

சட்டசபை கூட்டதொடரின் கடைசி நாளில் பேசிய காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி "ஜெயலலிதா இல்லாத இந்த சட்டசபை தனது கம்பீரத்தை இழந்து விட்டது.ஆனாலும் ஒரு எளிமையான முதலமைச்சர் எங்களுக்கு கிடைத்துள்ளார்" என்று கூறியதை குறிப்பிட்டே ஆகவேண்டும்.

PREV
click me!

Recommended Stories

முழு அரசியல்வாதியாக மாறிய விஜய்.. 'அந்த' வார்த்தையால் கண்கலங்கிய தளபதி.. இதை கவனிச்சீங்களா?
திமுக-காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை.. முடிவுகளுக்காக காத்திருக்கிறோம்: கே.சி. வேணுகோபால்