
ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் இருந்து தயாநிதி மாறன், கலாநிதி மாறன் உள்ளிட்ட அனைவரையும் சி.பி.ஐ. தனி நீதிமன்றம் விடுவித்ததை எதிர்த்து அமலாக்கப் பிரிவு, மற்றும் சி.பி.ஐ. அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் நேற்று மேல் முறையீடு செய்தது.
தயாநிதி, கலாநிதி ஆகியோரின் முடக்கப்பட்ட சொத்துக்களை விடுவிக்கக் கூடாது என்று சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவு மேல் முறையீட்டு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏர்செல் மேக்சிஸ்
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது தொலைத்தொடர்பு துறை அமைச்சராகஇருந்த தயாநிதிமாறன், தொழில் அதிபர் சிவசங்கரனிடம் இருந்த ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளை மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்குமாறு நிர்ப்பந்தித்ததாகவும், அதற்கு பிரதிபலனாக மேக்சிஸ் நிறுவனம் சன் டைரக்ட் நிறுவனத்தில் முதலீடு செய்தது என்றும் குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை மேற்கொண்டது
இது தொடர்பான வழக்கில், 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கை விசாரித்து வரும் டெல்லி சி.பி.ஐ. தனி நீதிமன்றத்தில் கடந்த 2014-ம் ஆண்டு ஆகஸ்டு 29-ந் தேதி சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
வழக்கு பதிவு
சுமார் ஆயிரம் பக்கங்களை கொண்ட இந்த குற்றப்பத்திரிகையில் தயாநிதி மாறன், அவரது சகோதரரும் சன் குழும நிறுவனங்களின் தலைவருமான கலாநிதி மாறன், மேக்சிஸ் நிறுவன தலைவர் டி.அனந்த கிருஷ்ணன், நிர்வாக செயல் அதிகாரி ரால்ப் மார்ஷல் ஆகியோரின் பெயர் களும் மற்றும் சன் டைரக்ட், மேக்சிஸ் கம்யூனிகேஷன்ஸ், சவுத் ஏசியா என்டர்டெயின்ட் மெண்ட் ஹோல்டிங்(மொரீஷியஸ்),அஸ்ட்ரோ ஆல் ஏசியா நெட்வொர்க் ஆகிய 4 நிறுவனங்களின் பெயர்களும் இடம்பெற்று இருந்தன.
அமலாக்கப்பிரிவு வழக்கு
மேலும் ஏர்செல்-மேக்சிஸ் விவகாரத்தில் சட்ட விரோத பண பரிமாற்றம் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து மத்திய அமலாக்கத்துறையும் தனியாக விசாரணை மேற்கொண்டது. இது தொடர்பாக அமலாக்கத்துறையின் சார்பில் அதே தனிநீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இதற்கிடையே, தங்கள் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி தயாநிதி மாறன், கலாநிதி மாறன் ஆகியோரும் மற்றவர்களும் தனி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தனர்.
தீர்ப்பு
இந்த வழக்கில் அனைத்து விசாரணைகளும் முடிவடைந்த நிலையில், இந்த வழக்கில் நீதிபதி ஓ.பி.சைனி நேற்றுமுன்தினம் தனது தீர்ப்பை வழங்கினார். ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் தயாநிதி மாறன், கலாநிதி மாறன் உள்ளிட்டோர் மீதான குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய முகாந்திரமோ, உரிய ஆதாரங்களோ இல்லாததால் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்படுவதாக அவர் அறிவித்தார்.
மத்திய தொலைத்தொடர்புத்துறை அதிகாரிகளும் சி.பி.ஐ. விசாரணை அதிகாரிகளும், அமலாக்கப்பிரிவு அதிகாரிகளும் இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்வதில் அரசாங்க விதிமுறைகளை மீறியுள்ளதாக கண்டனம் தெரிவித்த நீதிபதி, இந்த வழக்கு தொடர்பான அலுவலக கோப்புகளில் உள்ள விஷயங்கள் தவறாக கையாளப்பட்டுள்ளதாகவும், முன்னுக்குப் பின் முரணாக சாட்சியங்களை பதிவு செய்துள்ளதாகவும் நீதிபதி தெரிவித்தார்.
மேல்முறையீடு.
இந்நிலையில், இந்த சி.பி.ஐ. தனி நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சி.பி.ஐ. அமலாக்கப்பிரிவு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் இன்று மேல் முறையீடு செய்யப்பட்டது. அதில், தயாநிதி மாறன், கலாநிதி மாறன் ஆகியோரின் முடக்கப்பட்ட சொத்துக்களை விடுவிக்கக் கூடாது என்று சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவு வழக்கறிஞர்கள் தரப்பில் வாதம் எடுத்து வைக்கப்பட்டது.
8-ந்தேதி விசாரணை
இந்த மனு தலைமை நீதிபதி, ஜே.எஸ். கேகர், என்.வி. ரமணா, டி.ஓய். சந்திரசூத் ஆகியோர் கொண்ட அமர்வு முன் இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனு மீதான விசாரணையை வரும் 8-ந்தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதிகள் அறிவித்தனர்.