தமிழக பட்ஜெட் இன்று தாக்கல்.! இடம்பெறும் முக்கிய அம்சங்கள் என்ன.? என்ன.? தெரியுமா.?

By Ajmal Khan  |  First Published Mar 20, 2023, 7:54 AM IST

தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், குடும்பத்தலைவிகளுக்கான் மாதாந்திர உதவி தொகை, தனி மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


தமிழக பட்ஜெட் இன்று தாக்கல்

தமிழ்நாட்டின் நிதி நிலைமை தொடர்பான அறிக்கையை  சட்டபேரவையில் ஒவ்வொரு ஆண்டும் நிதி அமைச்சர் தாக்கல் செய்வார். அந்த வகையில் 2023-24 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று காலை காலை 10 மணிக்கு சட்டப்பேரவையில்  தாக்கல் செய்யவுள்ளார். பேரவையில் நிதித்துறை அமைச்சர்  பட்ஜெட் உரையை  வாசிப்பார். இதை தொடர்ந்து  சட்டசபை நிகழ்வுகள் ஒத்தி வைக்கப்படும். இதன் பின்னர் சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடைபெறும். இந்தக் கூட்டத்தில், சட்டசபையை எத்தனை நாட்கள் நடத்த வேண்டும்? அதில் என்னென்ன அலுவல்களை மேற்கொள்ள வேண்டும்? என்பது குறித்து முடிவு செய்யப்படும்.

Latest Videos

தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்..! குடும்பத்தலைவிகளுக்கான உரிமைத்தொகை அறிவிக்கப்படுமா.? புதிய திட்டங்கள் என்ன.?

கல்வி,சுகாதாரத்திற்கு நிதி ஒதுக்கீடு

திமுக ஆட்சி பொறுப்பெற்ற பின்பு வேளாண்மைக்கான தனி நிதி அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இந்த சூழலில் இந்தாண்டுக்கான வேளாண் நிதி அறிக்கை தாக்கல் செய்வது உள்பட அனைத்து அலுவல்கள் குறித்தும் அலுவல் ஆய்வுக் கூட்டத்தில்தான் முடிவு செய்து சபாநாயகர் அப்பாவு அதிகாரபூர்வமாக அறிவிப்பார். இந்த பட்ஜெட்டில், பெண்களுக்கான உரிமைத் தொகையாக மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட உள்ளது. மேலும், இந்த திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு, அதனால் பயனடையும் பெண்கள் பற்றிய விவரங்கள் அப்போது வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கல்வி, சுகாதாரம், விளையாட்டு போன்றவற்றுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே போல பொள்ளாச்சி உள்ளிட்ட ஒரு புதிய மாவட்டங்கள் தொடர்பான அறிவிப்பு இடம்பெறும் என கூறப்படுகிறது. மேலும் அடுத்த ஆண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாடு தொடர்பான அறிவிப்பும் வெளியாக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆன்லைன் சூதாட்ட மசோதா தாக்கல்

இந்த கூட்டத்தொடரில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா மீது சில கேள்விகளை முன்வைத்து ஆளுநர் ஆர்.என்.ரவி அதற்கு ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பினார். இது கடும் விமர்சனத்திற்கு உள்ளான நிலையில் இந்த மசோதா மீண்டும் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட‌ உள்ளது. மேலும் ஆளுநர் செயல்பாடுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கூட்டணி கட்சிகள் பிரச்சனை எழுப்ப கூடும் என கூறப்படுகிறது. கடந்த ஆட்சியில் அரசின் கடன் அதிகரித்து வந்த நிலையில், அதை கட்டுக்குள் கொண்டு வருவதற்கான முயற்சியை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்ய உள்ள நிதிநிலை அறிக்கையில், அரசினுடைய நிதிநிலைமையை சீர் செய்வதற்கு அரசு எடுத்து வரும் முயற்சிகள்,   திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு எதிர்கால நிதி மேலாண்மை குறித்த விபரங்களும் நிதிநிலை அறிக்கை உரையில் இடம்பெறும் என்றும் கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்

இப்படி செய்வது கட்சி வளர்ச்சிக்கு உகந்ததல்ல.. அண்ணாமலைக்கு அட்வைஸ் செய்கிறாரா கருப்பு முருகானந்தம்?

click me!