
திருச்சியில் நடக்கவிருந்த திமுக பொதுக்கூட்டத்திற்கு காவல் துறை அனுமதி மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வருவார்களா என்ற எதிர்பார்ப்பில் தொண்டர்கள் காத்திருக்கின்றனர்.
நீட் தேர்வால் மாணவி அனிதா தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அனிதாவின் தற்கொலைக்கு நீதி கேட்டும் தமிழகம் முழுவதும் மாணவர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே திருச்சியில் இன்று நீட் தேர்வை எதிர்த்து பொதுக்கூட்டம் நடத்தப்படும் என திமுக அறிவித்திருந்தது. இதற்கு காவல் துறையும் அனுமதி வழங்கியிருந்தது.
இதில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின், திருமாவளவன், திருநாவுகரசர், முத்தரசன், கே.என்.நேரு ஆகியோர் கலந்து கொள்வதாக இருந்தனர்.
ஆனால் உச்சநீதிமன்றம் இன்று வெளியிட்ட தீர்ப்பில் பொதுமக்களுக்கு இடையூறு கொடுக்கும் வகையில் உள்ள போராட்டத்திற்கு மாநில அரசு அனுமதி தரக்கூடாது என தெரிவித்தது.
இதனால் திமுகவுக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்வதாக திருச்சி காவல்துறை துணை ஆணையர் நோட்டிஸ் அனுப்பினார்.
அனைத்து ஏற்பாடுகளும் நிறைவுற்ற நிலையில் திமுக தொண்டர்கள் திருச்சியில் குவிந்த வண்ணம் இருக்கின்றனர்.
இந்நிலையில், பொதுக்கூட்டம் நடக்குமா நடக்காதா என்றும் தலைவர்கள் வருவார்களா வரமாட்டார்களா என்ற எதிர்ப்பார்ப்பும் எழுந்துள்ளது.