
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜின் மரணம் குறித்து நாளை விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று ஆத்தூர் போலீசார் சம்மன் அனுப்பி இருந்த நிலையில் இன்றே ஆஜராகி விளக்கம் அளிக்க ஓபிஎஸ் அணி எம்எல்ஏ ஆறுக்குட்டி ஆத்தூர் செல்கிறார்.
விபத்தில் மரணமடைவதற்கு முன்பு, ஆறுகுட்டி எம்எல்ஏவுடன் கனகராஜ் நான்கைந்து முறை போனில் பேசியதாகவும், அது குறித்து விசாணை நடத்த ஆத்தூர் காவல் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று எம்எல்ஏவுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
இந்நிலையில், சம்மன் குறித்து விளக்கமளித்த ஆறுக்குட்டி எம்.எல்.ஏ., சென்னைக்கு செல்லும் போது அவ்வப்போது மட்டும் கனகராஜ் காரில் என்னை அழைத்து செல்வார். கனகராஜ் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து அவரை பணியிலிருந்து நீக்கி விட்டேன் என்று தெரிவித்துள்ளார்.
அதிமுக அணிகள் பிரியும் முன் என் உதவியாளர்கள் எண்ணிலிருந்து கனகராஜ் எண்ணிற்கு அழைப்புகள் சென்றன. அழைப்புகள் சென்ற காரணத்தால் விசாரணைக்கு ஆஜராக போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர் என அவர் தெரிவித்தார்.
நாளை திண்டுக்கல்லில் ஓபிஎஸ் அணி சார்பில் பொதுக் கூட்டம் நடைபெற உள்ளதால் இன்று காலை 11.30 மணிக்கு ஆத்தூர் காவல் நிலையத்தில் ஆஜராக விளக்கம் அளிக்க உள்ளதாக ஆறுக்குட்டி தெரிவித்தார்.