
அதிமுகவின் இரு அணிகளும் இணைந்தால்தான், கட்சி, சின்னம் ஆகியவற்றை சேதாரம் இல்லாமல் மீட்க முடியும் என்று அதிமுகவின் ஒரு தரப்பு தீவிரமாக இயங்கி வருகிறது.
ஆனால், இரு அணிகளும் இணைந்தது விட்டால், மூன்று மாதத்திற்கு ஒரு முறை தருவதாக செய்துகொண்ட கூவத்தூர் ஒப்பந்தம் காலாவதியாகி, வருவாய் நின்றுவிடும் என்று ஆளும் தரப்பு எம்.எல்.ஏ, எம்.பி க்கள் அஞ்சுகின்றனர்.
ஆட்சி கையை விட்டு போகாமல் இருக்க, கூவத்தூரில் தங்க வைக்கப்பட்டிருந்த எம்.எல்.ஏ க்களுக்கும், எம்.பி க்களுக்கும் சிறப்பாக கவனிப்புகள் நடந்தன.
மேலும், மூன்று மாதத்திற்கு ஒருமுறை மாமூல், டெண்டர்களில் பங்கு என சில உறுதிமொழிகளும் வழங்கப்பட்டன. அதன் படி, கவனிப்புகள் வழங்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், அதிமுகவின் இரு அணிகளும் இணைந்தால், கூவத்தூர் ஒப்பந்தம் காலாவதி ஆகிவிடும், அதன்மூலம் மாமூலுக்கும் பங்கம் வந்துவிடும் என்பதால், ஆளும் தரப்பில் உள்ள எம்.எல்.ஏ, எம்.பி க்கள் அணிகள் இணைப்பை விரும்பவில்லை என்று கூறுகின்றனர்.
இது சம்பந்தமாக, பன்னீர் தரப்பில் உள்ள எம்.எல்.ஏ மற்றும் எம்.பி க்களிடமும், அணிகள் இணைப்பை ஊக்குவிக்க வேண்டாம் என்றும், அவர்கள் வேண்டுகோள் விடுத்து வருகிறார்களாம்.
கட்சி எப்படி போனால் என்ன, நமக்கு வரப்போவது நிற்கக்கூடாது என்று, இவர்களே நினைக்கும்போது, சில அமைச்சர்கள், அணிகள் இணைப்புக்கு இடையூறாக இருப்பதாக கூறுவது உண்மை அல்ல என்கின்றனர் விவரம் அறிந்த அதிமுகவினர்.