இல்லங்களில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலைகளை கோயில்களில் வைக்க ஏற்பாடு.. இந்து சமய அறநிலைத்துறை அதிரடி.

By Ezhilarasan BabuFirst Published Sep 10, 2021, 1:56 PM IST
Highlights

கொரோனா பரவல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு சமய விழாக்கள், மதம் சார்பான ஊர்வலங்கள், திருவிழாக்கள் நடத்த தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் பக்தர்கள் தங்கள் இல்லங்களில் வைத்து வழிபாடு செய்யப்பட்ட சிலைகளை ஆலயங்களில் வைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

பக்தர்கள் தங்கள் இல்லங்களில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலைகளை கோயில்களில் வைக்க இந்து சமய அறநிலைத்துறை அனுமதி வழங்கியுள்ளது. மேலும் பக்தர்களின் சிலைகளை பாதுகாப்பாக திருக்கோயில்களில் வைக்க ஏற்பாடு செய்ய தனி அலுவலர் ஒருவரை நியமிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் கோயில்களில் வைக்கப்பட்டுள்ள சிலைகளை அரசின் நிலையான வழிகாட்டுதல்களைப் பின்பற்றி சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் நீர்நிலைகளில் கரைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அனைத்து இந்து அறநிலை துறை இணை ஆணையர்களுக்கு இந்து சமய அறநிலை துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. மேலும் அதில் கூறியிருப்பதாவது, கொரோனா நோய்த்தொற்று பரவலை தடுக்கும் நோக்கத்துடன், பக்தர்கள் நலன் கருதியும் கோயில் நிர்வாகத்தால் எடுக்கப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் திருக்கோயில்களில் பின்பற்றப்பட வேண்டிய நிலையான வழிகாட்டி நடைமுறைகள் தெரிவிக்கப்பட்டு அதனை தவறாது கடைபிடித்து, அனைத்து சார்நிலை அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

கொரோனா பரவல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு சமய விழாக்கள், மதம் சார்பான ஊர்வலங்கள், திருவிழாக்கள் நடத்த தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் பக்தர்கள் தங்கள் இல்லங்களில் வைத்து வழிபாடு செய்யப்பட்ட சிலைகளை ஆலயங்களில் வைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் தங்களது இல்லங்களில் வைத்து வழிபாடு செய்யப்பட்ட சிலைகளை திருக்கோயில்களில் வைப்பதற்கு ஏதுவாக திருக்கோயில்களுக்கு பொறுப்பு அலுவலர் ஒருவரை நியமனம் செய்து, பக்தர்கள் வழங்கும் சிலைகளை எவ்வித புகாரும் ஏற்படாத வண்ணம் பெற்று திருக்கோயில் வளாகத்தில் பாதுகாப்பாக வைத்திட உரிய ஏற்பாடுகளை செய்திட மண்டல இணை ஆணையர்கள் மற்றும் சரக உதவி ஆணையர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மண்டல இணை ஆணையர்கள் மற்றும் சரக உதவி ஆணையர்கள் தங்களது மண்டல, சரகத்தில் நியமிக்கப்பட்ட பொறுப்பு அலுவலர் மற்றும் ஏற்பாடு விவரங்களை 11- 9-2021 காலை 11 மணிக்குள் இவ்வலுவலகத்திற்கு விவரம் அளிக்கப்பட வேண்டும் என அறிவுருத்தப்பட்டுள்ளது.

மேலும், மேற்படி தனியே பாதுகாப்பாக எடுத்து வைக்கப்பட்டுள்ள சிலைகளை நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி சுற்றுச்சூழல் பாதிக்காத வண்ணம் நீர்நிலைகளில் கரைக்க ஏதுவாக தொடர்புடைய மாவட்ட ஆட்சியரின் வழிகாட்டுதலை பெற்று உரிய நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து சார்நிலை  அலுவலர்களையும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். மேற்காணும் நிகழ்வினை முறையாக திருக்கோயில் நிர்வாகியை செயல்படுத்திட தக்க நடவடிக்கை மேற்கொள்ள மண்டல இணை ஆணையர் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர் என அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. 

 

click me!