பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கப்போறீங்களா இல்ல நாடகம் போடபோறீங்களா.? எதிர்க்கட்சிகளை அலறவிடும் அண்ணாமலை..!

By Asianet TamilFirst Published Nov 5, 2021, 9:43 AM IST
Highlights

பாஜக ஆளும் மாநில அரசுகள் போட்டிப்போட்டுக்கொண்டு பெட்ரோல், டீசல் விலை குறைப்பில் ஈடுபட்டுள்ளன. 

தமிழகம் உள்ளிட்ட எதிர்கட்சிகள் ஆட்சி நடக்கும் மாநில அரசுகள், பெட்ரோல், டீசல் விலை குறைப்பில் நேர்மறையான நடவடிக்கையை எடுக்குமா அல்லது வழக்கம்போல் நாடகங்களில் ஈடுபடுமா? என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துவந்த நிலையில், மத்திய அரசு இந்த எரிபொருட்கள் மீதான கலால் வரியை அதிரடியாகக் குறைத்தது. இதன்படி லிட்டர் பெட்ரோல் ரூ.5, டீசல் ரூ.10 என விலை குறைப்பு தீபாவளி திருநாள் அன்று அமலுக்கு வந்தது. பெட்ரோல், டீசல் விலையை மேலும் குறைக்க மாநில அரசுகள் விற்பனை வரி, வாட் வரியைக் குறைக்க முன்வர வேண்டும் என்றும் மத்திய அரசு கோரிக்கை விடுத்ததாக தகவல்கள் வெளியாயின.

இதையும் படியுங்கள் : பெட்ரோல், டீசல் விலை குறைப்பில் மாஸ் காட்டும் பாஜக மாநில அரசுகள்.. திண்டாடும் எதிர்க்கட்சி மாநில அரசுகள்.?

இதனையடுத்து பாஜக ஆளும் மாநில அரசுகள் போட்டிப்போட்டுக்கொண்டு பெட்ரோல், டீசல் விலை குறைப்பில் ஈடுபட்டுள்ளன. கர்நாடகா பாஜக அரசும் வாட் வரியை அதிரடியாக குறைத்துள்ளது. இதன்படி பெட்ரோல் மீதான வாட் வரி ரூ. 7-ம், டீசல் மீதான வாட் வரி ரூ. 7-ம் குறைக்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. அஸ்ஸாம், பீகார், கோவா, திரிபுரா, உத்தரகாண்ட், இமாசலப்பிரதேசம், மணிப்பூர், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் ஆளும் பாஜக அரசுகள் பெட்ரோல், டீசல் விலை குறைப்பை உடனடியாக அறிவித்தன. வரும் பிப்ரவரி மாதத்தில் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளும் உத்தரப்பிரதேச மாநில பாஜக அரசு, மத்திய அரசின் வரிக்குறைப்பையும் சேர்த்து பெட்ரோல், டீசல் விலையை ரூ. 12 வரை குறைத்துள்ளது. 

பாஜக மாநில அரசுகள் போட்டிப்போட்டுக் கொண்டு பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கும் அறிவிப்புகளை வெளியிட்டுள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளும் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கும் நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “பிரதமர் மோடி தீபாவளி பரிசாக பெட்ரோல், டீசல் விலையை குறைத்திருக்கிறார். அதைப் புதுச்சேரி, கர்நாடகா, குஜராத், கோவா, திரிபுரா, மணிப்பூர், அஸ்ஸாம் என பல பாஜக ஆளும் மாநில அரசுகளும் பின்பற்றியுள்ளன. தமிழகம் உள்ளிட்ட எதிர்கட்சிகள் ஆட்சி நடக்கும் மாநில அரசுகள், இதில் நேர்மறையான நடவடிக்கையை எடுக்குமா அல்லது வழக்கம்போல் நாடகங்களில் ஈடுபடுமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

click me!