இது சட்டத்தை மீறிய செயல்.. முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு..!

By vinoth kumarFirst Published Jul 20, 2021, 12:30 PM IST
Highlights

கடந்த அரசால் ஒதுக்கப்பட்ட போதும், தற்போதைய அரசின் புறக்கணிப்பால் பல்கலைக்கழகம் இன்னும் பழைய தாலுகா அலுவலகத்தில் செயல்படுவதாகவும், இன்னும் பல்கலைக்கழகத்திற்கு பதிவாளரும், போதுமான பணியாளர்களும் நியமிக்கப்படாததால் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

விழுப்புரத்தில் முந்தைய அதிமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட டாக்டர் ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகத்துக்கு நிதி ஒதுக்க கோரி முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

 விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்ட மாணவர்கள் நலனுக்காக, வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை பிரித்து விழுப்புரத்தை தலையிடமாக கொண்டு டாக்டர்.ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகம் முந்தைய அதிமுக ஆட்சியில் அமைக்கப்பட்டது. இந்த பல்கலைக்கழகத்துக்கு நிதி ஒதுக்க கோரியும், பதிவாளரை நியமிக்க கோரியும், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், டாக்டர்.ஜெயலலிதா பல்கலைகழகத்திற்கான துணை வேந்தர் நியமிக்கப்பட்டு, பல்கலைக்கழக கட்டுமானத்திற்காக விழுப்புரம் மாவட்டம், செம்மேடு கிராமத்தில், 70 ஏக்கர் நிலம் கடந்த அரசால் ஒதுக்கப்பட்ட போதும், தற்போதைய அரசின் புறக்கணிப்பால் பல்கலைக்கழகம் இன்னும் பழைய தாலுகா அலுவலகத்தில் செயல்படுவதாகவும், இன்னும் பல்கலைக்கழகத்திற்கு பதிவாளரும், போதுமான பணியாளர்களும் நியமிக்கப்படாததால் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அதன் முதுகலை மையத்தில், முதுகலை படிப்பில் சேர விண்ணப்பங்களை வரவேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது சட்டத்தை மீறிய செயல் எனவும், அந்த அறிவுப்புக்கு தடை விதிக்கவேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளார். இந்த மனு தலைமை நீதிபதி அமர்வில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

click me!