பாரதியார் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினராக பாஜக துணைத்தலைவரை நியமிப்பதா..!! ஆளுனருக்கு சரமாரி கேள்வி.

By Ezhilarasan BabuFirst Published Sep 9, 2020, 9:58 AM IST
Highlights

பாரதீய ஜனதா கட்சியின் மாநிலத் துணைத் தலைவராக  நியமிக்கப்பட்டுள்ள பி.கனகசபாபதியை, பாரதியார் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினராக  தமிழக ஆளுநர்  நியமித்திருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

பாரதியார் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினராக பாஜக துணைத்தலைவரை நியமிப்பதா என கேம்பஸ் ஃப்ரண்ட் ஆப் இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம்:- 

பாரதீய ஜனதா கட்சியின் மாநிலத் துணைத் தலைவராக  நியமிக்கப்பட்டுள்ள பி.கனகசபாபதியை, பாரதியார் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினராக  தமிழக ஆளுநர்  நியமித்திருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. தமிழகம் மட்டுமின்றி அனைத்து மாநிலங்களிலும் பாஜக, ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் கல்வி நிறுவனங்களில் முக்கிய பதவிகளை கொடுத்து அமரவைக்கும் போக்கு தொடர்கதையாகி வருகிறது.  குறிப்பாக பாஜகவின் திட்டம் பலிக்காத தமிழகத்தில், பாஜக-வை சேர்ந்த நபர்களுக்கு அரசு துறை சார்ந்த உயர்பதவிகள் கொடுத்து தமிழகத்தில் ஆர் எஸ் எஸ் - ன் கொள்கைகளை வளர்த்துவிடலாம் என மத்திய பாஜக அரசு முயன்று வருகிறது. 

அதன் நீட்சியாக தான்  பாஜகவின் மாநில துணைத்தலைவர் கனகசபாபதியை மூன்று ஆண்டுகளுக்கு, பாரதியார் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினராக ஆளுநர் நியமித்திருக்கிறார். 3 சிண்டிகேட் உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரம், 'வேந்தர்' என்ற முறையில் தமிழக ஆளுநர் அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. அப்படி, 'பாரதியார் பல்கலைக்கழகச் சட்டம் - 1981'- ல் வழங்கப்பட்டுள்ள அதிகாரம், “கல்வி வல்லுநர்களை” சிண்டிகேட் உறுப்பினர்களாக நியமனம் செய்யவேண்டும். அதைவிடுத்து, பாரதீய ஜனதா கட்சியில் உள்ள தலைவர்களை நியமிப்பது பாரதியார் பல்கலைக்கழக சட்டத்திற்கு எதிரானது. அரசியல் கட்சியில் உள்ளவரை, பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினராக நியமித்து அதிகாரத்தை ஆளுநர் தவறாக பயன்படுத்தியிருப்பது, மிகுந்த கண்டனத்திற்குரியது. 

ஆளுநர் பல்கலைக்கழகங்களின் தரத்தை உயர்த்துவதற்கான விவாதத்தில் ஒருபுறம் பங்கேற்றுக் கொண்டு - இன்னொரு பக்கம், பா.ஜ.க.,வில் அங்கம் வகிக்கும் நிர்வாகி ஒருவரை பல்கலைக்கழகத்திற்கு நியமிப்பது, அரசு கல்வி நிறுவனங்களை காவி மயமாக மாற்றும் போக்காகும். பல்கலைக்கழகக் கல்வியை காவிமயமாக்க ஒரு அரசியல் கட்சியின் பிரச்சாரத்திற்கு மேடைபோட்டு கொடுக்க, அரசின் உயரிய பதவியில் அமர்ந்துள்ள ஆளுநர் முனைந்திருப்பது அரசியல் சாசன சட்டத்தையே தவறாக பயன்படுத்தும் செயலாகும். இந்த நியமன நடவடிக்கை என்பது சட்டம், வேந்தருக்கு வழங்கியுள்ள அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதாகவும் - சட்டமன்ற ஜனநாயகம், ஆளுநர் மீது வைத்த நம்பிக்கையைத் தகர்ப்பதாகவும் உள்ளது. 

சிண்டிகேட் உறுப்பினரை நியமிக்க அதிகாரம் அளித்துள்ள அதே சட்டத்தில் உள்ள பிரிவு 10(2)ல், “இதுபோன்ற நியமனங்களைச் செய்யும் முன்பு, துணை வேந்தருடன் கலந்து ஆலோசித்து வேந்தர் நியமிக்க வேண்டும்”-என்று தெளிவாக இருக்கின்ற போது, பா.ஜ.க.,வில் உள்ள துணைத் தலைவர் ஒருவரை சிண்டிகேட் உறுப்பினராக நியமிக்க, துணை வேந்தர் எப்படிப் பரிந்துரை செய்தார்? உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், எப்படி இதை அனுமதித்தார் போன்ற கேள்விகள் எழுகின்றன.உயர்கல்வியின் தரத்தைச் சீர்குலைத்து - கல்வியைக் காவிமயமாக்க பா.ஜ.க.,விற்கு அ.தி.மு.க. அரசு துணைபோவதை கேம்பஸ் ஃப்ரண்ட் வன்மையாக கண்டிக்கிறது. 

எனவே, பாரதியார் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினராக திரு. கனகசபாபதியை நியமித்த உத்தரவை, மாண்புமிகு ஆளுநர் அவர்கள் திரும்பப் பெற வேண்டும் எனவும், பாஜக துணைத்தலைவரை பாரதியார் பல்கலைகழகத்தின் சிண்டிகேட் உறுப்பினராக நியமிக்க துணைபோன அப்பல்கலைக்கழக துணைவேந்தர் இதுகுறித்த தெளிவான அறிக்கையை வெளியிட வேண்டுமெனவும், மேலும், மத்திய பாஜக அரசு கல்வி நிலையங்களில் தனது காவி மயத்தை நிறுவுவதற்கான முயற்சிகளை நிறுத்திக்கொள்ளவேண்டும் எனவும், இதை தவறும் பட்சத்தில் மாணவர்களை அணிதிரட்டி மாபெரும் போராட்டத்தை முன்னெடுப்போம் என கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

click me!