
தனது சிகிச்சை குறித்த புகைப்படங்கள் , காட்சிகளை வெளியிட ஜெயலலிதா விரும்ப வில்லை ஆகவே புகைப்படங்கள் எதையும் வெளியிடவில்லை என்று அப்போலோ நிர்வாகம் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது .
சென்னை உயர்நீதிமன்றத்தில் அ.தி.மு.க. தொண்டர் ஜோசப் என்பவர் ஒரு பொதுநல வழக்கை தாக்கல் செய்திருந்தார்.
அதில், தமிழக முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா கடந்த டிசம்பர் மாதம் 5-ந் தேதி மர்மமான முறையில் இறந்துள்ளார். அவரது சாவில் பல சந்தேகங்கள் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. எனவே, ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு ஓய்வுப்பெற்ற நீதிபதிகள் 3 பேர் தலைமையில் ஒரு குழுவை அமைக்கவேண்டும்’ என்று கூறியிருந்தார்.
அ.தி.மு.க. தொண்டர் ஜோசப் தொடர்ந்த வழக்கை முன்பு நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், வி.பார்த்திபன் ஆகியோர் விசாரித்தனர்.
அப்போது நீதிபதி எஸ்.வைத்தியநாதன், ‘ஜெயலலிதா மரணத்தில் தனிப்பட்ட முறையில் தனக்கு பல சந்தேகங்கள் உள்ளன. அவரது உடலை தோண்டி வெளியில் எடுத்து பரிசோதித்தால் தான் உண்மைகள் எல்லாம் வெளியில் வருமா?’ என்று கேள்வி எழுப்பினார். நீதிபதியின் இந்த கருத்து நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த வழக்குகள் தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் பதில் மனுவை தாக்கல் செய்ய மாநில அரசு சார்பில் கால அவகாசம் கேட்கப்பட்டது.
அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகம் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் பி.எஸ்.ராமன், ‘ஜெயலலிதாவின் மரணத்தில் எந்த ஒரு மர்மமும் இல்லை. மனுதாரர் வக்கீல்கள், பத்திரிகைகளில் வெளியான செய்தியின் அடிப்படையில் இதுபோன்ற குற்றச்சாட்டுக்களை சுமத்துகிறார்.
ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்த அனைத்து ஆதாரங்களும் ஆஸ்பத்திரி நிர்வாகத்திடம் உள்ளது. இந்த ஐகோர்ட்டு உத்தரவிட்டால், அந்த விவரங்களை மூடி முத்திரையிட்ட உரையில் தாக்கல் செய்ய தயாராக உள்ளது’ என்று கூறினார்.
இதையடுத்து நீதிபதிகள், ‘ஜெயலலிதாவின் நெருங்கிய உறவினர்கள் யாரும் அவரது சாவில் மர்மம் உள்ளது என்று கூறி வழக்கு தொடர வில்லை. அதனால், இந்த வழக்கில் 3 கேள்விகள் எழுந்துள்ளன.
ஒன்று, இந்த வழக்கை தொடர அ.தி.மு.க. தொண்டர்கள் இருவருக்கும், டிராபிக் ராமசாமிக்கும் அடிப்படை உரிமை உள்ளதா? என்பதை பார்க்கவேண்டும். இரண்டாவது, ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சையில் குறிப்பிட்ட சந்தேகம் எதுவும் உள்ளதா? மூன்றாவது, ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்த விவரங்களில், எதை பொதுமக்களுக்கு தெரியப்படுத்தலாம்?. இந்த 3 கேள்விகளுக்கு விடை காண வேண்டியதுள்ளது’ என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
எனவே, அ.தி.மு.க. தொண்டர் ஜோசப் தாக்கல் செய்த வழக்கிற்கு, பிரதமர் அலுவலக முதன்மை செயலாளர், மத்திய உள்துறை செயலாளர், தமிழக தலைமை செயலாளர், உள்துறை செயலாளர், சி.பி.ஐ. இயக்குனர் உள்ளிட்டோர் தனித்தனியாக பதில் மனுக்களை தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கப்படுகிறது. என்று வழக்கை ஒத்திவைத்தனர்.
இன்று வழக்கு தலைமை நீதிபதி பொறுப்பு ஹுலுவாடி ரமேஷ் மற்றும் நீதிபதி ஆர்.மகாதேவன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது அப்போது அப்போலோ மருத்துவமனை சார்பில் அதன் சட்டத்துறை மேலாளர் அருண்குமார் ஆஜராகி அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில் ஜெயலலிதாவுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டது. ஜெயலலிதா விருப்பப்படியே அவரிடம் கேட்டுத்தான் மருத்துவ அறிக்கைகள் வெளியிடப்பட்டது. மேலும் இந்திய மருத்துவ கவுன்சில் விதிப்படி நோயாளியின் அந்தரங்க சிகிச்சை விபரங்கள் புகைப்படங்களை வெளியிட கூடாது . நோயாளி விருப்பமில்லாமல் எதையும் செய்ய கூடாது மேலும் தனது புகைப்படத்தை வெளியிட ஜெயலலிதா விரும்பாததால் வெளியிடவில்லை என்றார்.
மேலும் மருத்துவ சிகிச்சை குறித்த விபரங்களை நீதிமன்றம் உத்தரவிட்டால் அளிக்கத்தயார் என்று தெரிவித்தார். இதே போல் தமிழக அரசின் சார்பில் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் சார்பில் வக்கீல் எம்.கே.சுப்ரமணியம் ஆஜராகி சிகிச்சை அளிக்கப்பட்டது குறித்து விளக்கி கூறினார்.
பின்னர் மத்திய அரசு தரப்பில் பதிலளிக்க வக்கீல் மதனகோபால் அவகாசம் கேட்டதை அடுத்து வழக்கை மார்ச் 13 க்கு ஒத்திவைத்தனர்.