ஆயுள் சிறைவாசிகள் விடுதலையை மக்கள் போராட்டமாக மாற்றிய அன்சாரி: உளவுத்துறை ரிப்போர்ட் .. கையை பிசையும் ஸ்டாலின்

By Ezhilarasan BabuFirst Published Sep 14, 2022, 7:21 PM IST
Highlights

பல ஆண்டுகளாக சிறையில் வாடும் ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்ய வேண்டுமென மனிதநேய ஜனநாயக கட்சி நடத்திய போராட்டம் மக்கள் இயக்கமாக மாறியுள்ள நிலையில், சிறைவாசிகள் விவகாரத்தில்  முடிவு எடுக்க வேண்டிய நெருக்கடியில் அரசை தள்ளியுள்ளது. 

பல ஆண்டுகளாக சிறையில் வாடும் ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்ய வேண்டுமென மனிதநேய ஜனநாயக கட்சி நடத்திய போராட்டம் மக்கள் இயக்கமாக மாறியுள்ள நிலையில், சிறைவாசிகள் விவகாரத்தில்  முடிவு எடுக்க வேண்டிய நெருக்கடியில் அரசை தள்ளியுள்ளது. 

சாதி மதம் கடந்து அரசியல் பாகுபாடு கடந்து அனைத்து தரப்பினரும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டதே இதற்கு காரணமென கூறப்படுகிறது. இது குறித்து உளவுத்துறையும் ரிப்போர்ட் அனுப்பியுள்ளதா தகவல் வெளியாகி உள்ளது.

ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சி தலைமைச் செயலக முற்றுகை போராட்டம் அறிவித்தது, கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஆயுள் சிறைவாசிகளை விடுவிக்க கோரி ஆயிரக்கணக்கானோர் பேரணியில் கலந்து கொண்டனர்.

அரசியல் களத்தில் எதிரும் புதிருமாக உள்ள கட்சியினர் கூட இப்பேரணியில் பங்கேற்றனர். குறிப்பாக பாமக,  விடுதலை சிறுத்தைகள்,  தமிழர் வாழ்வுரிமை கட்சியின் பிரதிநிதிகள்  மஜகவின் போராட்ட மேடையில் அணிவகுத்தனர்.

10 ஆண்டுகள் 20 ஆண்டுகள் என சிறையில் வாடும் ஆயுள் சிறைவாசிகளை மனித நேயம் கருதி அவர்களை முன் விடுதலை செய்ய வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது, ஆனால் இதிலும் இஸ்லாமிய ஆயுள் சிறைவாசிகள் மீது பாரபட்சம் காட்டப்படுவதாகவும், விடுதலையின் போது இஸ்லாமிய கைதிகள் மட்டும் புறக்கணிக்கப்படுவதாகவும் மறுபுறம் குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

இந்நிலையில், நன்னடத்தையின் அடிப்படையில் அவர்களை விடுவிக்க வேண்டும் என்று கடந்த ஓராண்டுக்கும் மேலாக பல்வேறு இஸ்லாமிய இயக்கங்கள் தீவிரமாக குரல் கொடுத்து வருகின்றன. இதற்கான பல போராட்டங்கள் ஏற்கனவே மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

இதன் தொடர்ச்சியாகவே தலைமைச் செயலக முற்றுகைப் போராட்டதை மஜக பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி அறிவித்தார். அதில் 500 முதல் 600 பேர் வரை மட்டுமே கலந்து கொள்வார்கள் என உளவுத்துறை கணித்திருந்த நிலையில் எதிபாராத வகையில் ஆயிரக்கணக்கானோர் பேரணியில் திரண்டனர்.

ஆளுங்கட்சி கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள், தமிழர் வாழ்வுரிமை கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் சமூக செயல்பாட்டாளர்கள் பலர் இதில் பங்கேற்றனர் பேரணி பிரமாண்டமாக உருவெடுத்தது. இந்த தகவல் அரசின் கவனத்திற்கும் உளவுத்துறை மூலம் சென்றுள்ளது. 

மாஜக ஒருங்கிணைத்த இப்பேரணியில் முஸ்லீம்களுக்கு இணையாக இந்துக்கள் கணிசமான அளவில் கலந்து கொண்டனர். இதன்மூலம் ஆயுள் சிறைவாசிகளின் முன் விடுதலைப் போராட்டம் மக்கள் இயக்கமாகவே மாறியது என கூறலாம். இதன் அடுத்தக்கட்டம் என்னவாக இருக்கும் என, உளவுத்துறை உன்னிப்பாக கவனிக்கும் வகையில் போராட்டம் உருமாறியுள்ளது. இதுதொடர்பாக ரிப்போர்ட்டும் அரசின் அனுப்பப்பட்டுள்ளது. 

அன்சாரியின் அழைப்பை ஏற்று இப்பேரணியில் பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர், கும்பகோணம் தவத்திரு.
திருவடிக்குடில் சுவாமிகள் இப்பேரணிக்கென பிரத்தியேக காணொளியை வெளியிட்டு  ஆதரவு தெரிவித்ததுடன், ஆதரவையும் திரட்டினார். தஞ்சை விசிறி சாமியார் பங்கெடுத்தார், இதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மதம் கடந்து கலந்து கொண்டனர். 

இது ஒரு புறம் இருக்க, இப்பேரணியின் தொடர்ச்சியாக, அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு ஆயுள் சிறைவாசிகளை விடுவிக்க வேண்டுமென மாஜக பொதுச் செயலாளர் அன்சாரி, தமிழக முதலமைச்சருக்கு உருக்கமாக அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதன் விவரம் பின்வருமாறு:-

மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்ற பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள், முதலமைச்சராக பொறுப்பேற்று அமெரிக்க பயணம் மேற்கொண்டார், பயணத்தின் போது வழியில் போப்பாண்டவரையும் சந்தித்தார். அப்போது போப் அண்ணாவிடம் உங்களுக்கு என்ன  பரிசு வேண்டும் என  கேட்க, அதற்கு அண்ணா எங்கள் நாட்டின் விடுதலை வீரர் மோகன் ரானடேவை விடுவிக்க போர்ச்சுக்கல் அரசிடம் நீங்கள் வலியுறுத்த வேண்டுமென போப்பிடம் கோரிக்கை வைத்தார்.

அண்ணாவின் கோரிக்கையை ஏற்ற போப் உடனே போர்ச்சுக்கல் அரசிடம் பேசி, கோவாவின் விடுதலைக்காக போராடி சிறைப்பட்டுக் கிடந்த மோகன் ரானடேவை விடுவித்தார். கோவா விடுதலைக்காக போராடிய போராளியின் ரானடேவின் விடுதலை அண்ணாவால் சாத்தியமானது, அப்படிப்பட்ட அண்ணாவின் வழியில் ஆட்சி செய்கின்ற தமிழக முதலமைச்சராகிய நீங்கள், பெரியாரின் முற்போக்கும், அண்ணாவின் மனிதநேயமும், கலைஞரின் கனிவும் ஒருங்கே கொண்ட நீங்கள், சிறையில் வாடும் ஆயுள் சிறைவாசிகளை முன் விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

இதில் மனிதநேயம் கொண்ட தாங்கள் உதவாவிட்டால் வேறு யார் உதவுவார்கள் என்றும் அன்சாரி உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது. இப்போராட்டத்திற்கு அனைத்து தரப்பு மக்களின் ஆதரவு கிடைத்துள்ள நிலையில் இதில் முதல்வர் என்ன முடிவு எடுக்க போகிறார் என்பது எதிர்பார்ப்பாக உள்ளது. 
 

click me!