
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நடித்துள்ள அரபி என்ற திரைப்படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. அதில் அண்ணாமலை புல்லட்டில் சீறி வரும் காட்சி இடம்பெற்றுள்ளது. இது பலரையும் கவர்ந்து வருகிறது. அண்ணாமலை அதில் மிக ஸ்மார்ட்டாக காட்சியளிக்கிறார். அதை பாஜகவினர் சமூகவலைதளத்தில் பரப்பி வருகின்றனர்.
தமிழகத்தின் கரூர் மாவட்டம் சின்ன தாராபுரத்தில் இருக்கும் சொக்கம்பட்டியில் பிறந்தவர் அண்ணாமலை, 38 வயதாகும் இவர் கர்நாடக மாநிலத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக பணிபுரிந்து வந்தவர் ஆவார். இளம் வயதிலிருந்தே அரசியல் மீது ஆர்வம் கொண்ட இவர், கோயம்புத்தூர் பிஎஸ்ஜி கல்லூரியில் பட்டம் பயின்றார். அப்போதிலிருந்தே யுபிஎஸ்சி தேர்வுக்கு தீவிரமாக தயாராகி வந்தனர். 2011ஆம் ஆண்டு யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஆனார். தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்தவர் என்றாலும் கர்நாடக மாநிலத்திலே அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அதிரடி காவல் அதிகாரி என பெயர் எடுத்த இவருக்கு கர்நாடக மாநிலத்தில் ஏராளமான ரசிகர் பட்டாளம் உண்டு. அதிரடி நடவடிக்கைகளால் கர்நாடக மக்களால் சிங்கம் அண்ணாமலை என்று அழைக்கப்பட்டவர் ஆவார். ரவுடியிசம் கலவரத்திற்கு எதிரானவர் என பெயர் எடுத்தார்வர் அண்ணாமலை.
யாராக இருந்தாலும் களத்தில் இறங்கி நேரடியாக சினிமாவில் வருவது போல ரவுடிகளை கைது செய்வது, சவால் விடுவது என அண்ணாமலை கர்நாடக மாநிலத்தில் பிரபலம். பின்னர் பிரதமர் மோடியின் மீது ஏற்பட்ட ஈர்ப்பின் காரணமாக தன்னை பாஜகவின் இணைத்துக் கொண்டார். துவக்கத்தில் தமிழக பாஜக துணைத் தலைவராக இருந்த அவர், தற்போது மாநில தலைவராக உயர்ந்துள்ளார். காவல்துறை பணியை போல அரசியல் களத்திலும் தனது அதிரடி ஆட்டத்தை ஆடத் தொடங்கியுள்ளார் அண்ணாமலை. அண்ணாமலையின் கேள்விக்கு பதில் சொல்வதே தமிழக ஆட்சியாளர்களின் பிரதான வேலையாக மாறியுள்ளது என சொல்லும் அளவுக்கு அரசுக் கெதிரான கேள்விக் கணைகளை தொய்வின்று தொடுத்து வருகிறார். தமிழக பாஜக மாநில தலைவரானது முதல் பாஜக மீது இளைஞர் அதிகளவில் ஆர்வம் செலுத்தும் நிலை உருவாகி உள்ளது என்றே கூறலாம்.
ஒருபுறம் தீவிர அரசியலில் ஈடுபட்டு வரும் நிலையில் முதல் முறையாக திரைப்படம் ஒன்றிலும் அவர் நடித்துள்ளார். இரண்டு கைகளையும் இழந்த விடாமுயற்சியின் காரணமாக சர்வதேச அளவில் நீச்சலில் சாதனை படைத்த பாரா நீச்சல் வீரர் விஷ்வாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் அவர் நடித்துள்ளார். கன்னட இயக்குனரான ராஜ்குமார் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க அண்ணாமலையை அனுகிய நிலையில் கதை பிடித்துப்போக படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார் அவர். இப்படத்திற்கு ஊதியமாக ஒரே ஒரு ரூபாய் மட்டும் அவர் வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. படம் நேர்த்தியாக தயாராகியுள்ள நிலையில், படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் அண்ணாமலை படத்தில் நடித்துள்ள போஸ்டர் வெளியானது. இதை பாஜகவினர் தீவிரமாக பரப்பிவருகின்றனர். இந்நிலையில் அரபி படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. அதில் அண்ணாமலை செம ஸ்மார்ட் ஆக புல்லட்டில் சீறி வருவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
இதில் அண்ணாமலை சிங்கம் அண்ணாமலை ஐபிஎல் என நேம் கார்டு போடப்பட்டுள்ளது. பாஜக மாநில தலைவர், இளம் தலைவரான அண்ணாமலையை பாஜக தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். பலர் சினிமாவில் நடித்து அரசியலுக்கு வரும் நிலையில், அரசியலுக்கு வந்து சினிமாவில் காலடி எடுத்து வைத்துள்ள அண்ணாமலைக்கு திரையுலகில் சிறந்த எதிர்காலம் காத்திருக்கிறது என பலரும் பாராட்டி வருகின்றனர்.