தென் தமிழகத்தில், மக்கள் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் இந்த துயரமான வேளையில், தமிழக முதல்வரோ, ஊழல்வாதிகள் மற்றும் குடும்ப அரசியல்வாதிகளின், இந்தி கூட்டணி நடத்தும் கூட்டத்தில் கலந்து கொள்ள டெல்லிக்குச் சென்றிருப்பதாக அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
திமுக அமைச்சர்களுக்கு செக்
திமுக அரசின் செயல்பாட்டை தமிழக பாஜக கடுமையாக விமர்சித்து வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும், அண்ணாமலைக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கடந்த ஜூன் மாதம் கைது செய்தது. சுமார் 6 மாத காலத்திற்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சொத்து குவித்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கான தண்டனை விவரம் நாளை மறுதினம் வெளியாகவுள்ளது.
சீட்டு கட்டு போல சரிகிறது
இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ஊழலை மட்டுமே தனது அரசியல் பிழைப்பாகக் கொண்டு, எதிர்ப்புக் குரல்களை அதிகார பலத்தின் மூலம் அடக்கிய ஒரு போலியான சித்தாந்தம், இன்று சீட்டுக் கட்டு போல சரிந்து விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே, இலாகா இல்லாத திமுக அமைச்சர் ஒருவர், ஊழல் குற்றச்சாட்டில் சிறையில் உள்ளார்.
தமிழக உயர்கல்வி அமைச்சர் திரு பொன்முடியோ, ஊழல் குற்றச்சாட்டில் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ளார். தென் தமிழகத்தில், மக்கள் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் இந்த துயரமான வேளையில், தமிழக முதல்வரோ, ஊழல்வாதிகள் மற்றும் குடும்ப அரசியல்வாதிகளின், இந்தி கூட்டணி நடத்தும் கூட்டத்தில் கலந்து கொள்ள டெல்லிக்குச் சென்றிருக்கிறார் என அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
இதையும் படியுங்கள்
அமைச்சர் பதவியை இழக்கப்போகிறாரா பொன்முடி.? நீதிமன்ற உத்தரவால் அதிர்ச்சியில் திமுக