Annamalai-M.K.Stalin:மாரிதாசை தொட்டீங்க.. என்னை தொட்டுபாருங்க.. திமுக அரசுக்கு சொல்லாமல் சொல்லும் அண்ணாமலை.

By Ezhilarasan BabuFirst Published Dec 14, 2021, 12:12 PM IST
Highlights

இந்நிலையில் திருநெல்வேலி மாவட்ட கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நன்றாக இருந்தால்தான் தமிழகம் அமைதியாக இருக்கும், மாநிலத்தின் பயங்கரவாதம் தலைதூக்க எல்லாவிதமான சூழலும் இங்கு இருக்கிறது.  

தமிழகத்தில் பயங்கரவாதம் தலைதூக்க எல்லா சூழ்நிலையும் இருக்கிறது என்றும், அதை தடுக்க தமிழக அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். ஏற்கனவே தமிழகத்தில் பயங்கரவாதம் இருப்பது போல சித்தரித்து டுவிட் செய்த  யூடியூபர் மாரிதாஸ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அண்ணாமலை இவ்வாறு கூறியிருப்பது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

திமுக ஆட்சி பொறுப்பேற்று 7 மாதங்கள் நிறைவடைந்துள்ளது. அக்கட்சி எதிர்கட்சியாக இருந்தது முதலே பாஜகவுக்கும் திமுகவுக்கும் கருத்தியல் ரீதியிலான மோதல் இருந்து வருகிறது.  அந்நிலையில் சட்டமன்றத்தில் அதிமுக எதிர்க்கட்சியாக இருந்தாலும் கூட உண்மையான எதிர்க்கட்சி தாங்கள்தான் என்ற பிம்பத்தை மக்கள் மத்தியில் உருவாக்கும் முயற்சியில் பாஜக தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். எதிர்க்கட்சியான அதிமுகவை காட்டிலும் திமுகவை கடுமையாக எதிர்ப்பதில் பாஜகவினர் அதிக முனைப்பு காட்டி வருகின்றனர். தேர்தல் நேரத்தில் திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற உடனே நிறைவேற்ற வேண்டும், பொய் வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்த திமுக, இந்து மக்களுக்கு எதிராக செயல்படும் திமுக எனப் பலவகைகளில் திமுக அரசுக்கு எதிராக பிரச்சாரங்களை பாஜக  முன்னெடுத்து வருகிறது. தற்போதுள்ள நிதி நெருக்கடியில் மக்கள் பிரச்சினைகளை கையாள வேண்டிய சூழலில் உள்ள திமுக அரசுக்கு பாஜகவின் தீவிர பிரச்சாரம் பெரும் தலைவலியாக மாறியுள்ளது.

எதிர்க்கட்சிகளின் விமர்சனத்திற்கு பதில் சொல்லியபடியே அரசின் திட்டங்களை முன்னெடுக்கும் சவால்  நிறைந்த பணியை முதலமைச்சர் ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார். இந்தநிலையில் திமுகவுக்கு எதிராக தொடர்ந்து அவதூறு பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் நபர்களின் மீது வழக்கு பாய்ந்து வருகிறது. அந்த வகையில் திமுகவுக்கு எதிராக வெறுப்பு பிரச்சாரம் மேற்கொண்டு வந்த பாஜகவை சேர்ந்த கல்யாணராமன், யூடியூபே கிஷோர் கே.சாமி ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வருகின்றனர். இந்த வரிசையில் திமுகவை தொடர்ந்து விமர்சித்து வந்த மாரிதாஸ் என்பவர் மீது ஏற்கனவே பல புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் மாரிதாஸ் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வந்தனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடந்த ராணுவ ஹெலிகாப்டர்  விபத்தில் பாதுகாப்பு படை தலைவர் பிபின் ராவத் மற்றும் சக ராணுவ வீரர்கள் 13 பேர் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளநு. இந்த சம்பவத்தை மேற்கோள்காட்டி சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை மாரிதாஸ் பதிவிட்டுள்ளார். அந்த  கருத்தின் அடிப்படையில் போலீசார் அவரை கைது செய்துள்ளனர். 

அவரது டுவிட்டர் பக்கத்தில்" திமுக ஆட்சியின் கீழ் தமிழகம் இன்னொரு காஷ்மீராக மாறுகிறதா? தேசத்திற்கு எந்த பெரிய துரோகத்தையும் செய்யக்கூடிய ஒரு கூட்டத்தை உருவாக்கி வைத்துக் கொள்ள இங்கே சுதந்திரம் இருக்கும் என்றால், இங்கே எந்தப் பெரிய சதிவேலை நடப்பதற்கும் சாத்தியமுண்டு. பிரிவினைவாத சக்திகள் ஒடுக்கப்பட வேண்டும் என்ன பதிவிட்டிருந்தார். அவரின் இந்த பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதாவது காஷ்மீரைப்போல தமிழகம் தீவிரவாத கூடாரமாக மாறி வருகிறதா என்ற தொனியில் அவரது இந்த பதிவு இருப்பதாக கூறி, போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.  இதேபோல முப்படைத் தளபதி இறப்பின் பின்னணியில் தீவிரவாத இயக்கங்களின் தலையீடு இருப்பதாக சமூக வலைதளத்தில் வதந்திகளை பரப்பிய இன்னும் சிலரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில் மாரிதாசின் கைது நடவடிக்கை பாஜக மற்றும் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. மாரிதாசின் கைது நடவடிக்கையை தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மிக வன்மையாக கண்டித்துள்ளார்.

இதுதொடர்பாக கடந்த சிலதினங்களுக்கு முன்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாரிதாஸ் கைது  செய்யப்பட்ட செய்தியை கேட்டறிந்து அவரிடம் தொலைபேசி மூலம் உரையாடினேன், ஜனநாயகம் அளித்துள்ள கருத்துரிமை பொருட்படுத்தாமல் பாரபட்சமான இந்த நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறேன். திமுகவை விமர்சித்தால் மட்டும் கைதா? இதுதான் தற்போதைய தமிழ்நாட்டின் அவலநிலை என கூறியதுடன், தமிழகத்தில் டிஜிபி கட்டுப்பாட்டில் காவல்துறை இல்லை, தமிழக டிஜிபியை பொருத்தவரையில் சைக்கிளில் போவத,  செல்பி எடுப்பது, போட்டோ எடுப்பது போன்றவற்றில் மகிழ்ச்சியாக இருந்து வருகிறார். ஆகவே ஆட்சியை நடத்துவது வேறு யாரோ, திமுகவுக்கு நான் ஒன்று சொல்லிக் கொள்கிறேன், அனைத்திற்கும் ஒரு எல்லை உண்டு, தமிழகத்தில் வன்முறையாக கருத்து பதிவு செய்தால் அது குறித்து வேறு எந்த மாநிலத்திலும் புகார் கொடுக்கலாம் என எச்சரித்திருந்தார். அவரின் இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. 

இந்நிலையில் திருநெல்வேலி மாவட்ட கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நன்றாக இருந்தால்தான் தமிழகம் அமைதியாக இருக்கும், மாநிலத்தின் பயங்கரவாதம் தலைதூக்க எல்லாவிதமான சூழலும் இங்கு இருக்கிறது.  எனவே தமிழக அரசு உடனே அதை தடுக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். மேலும் கொழும்பு ஈஸ்டர் குண்டு வெடிப்புக்கும் தமிழகத்திற்கும் சம்பந்தம் இருப்பதாக தமிழர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலை நக்சல்பாரிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. மார்த்தாண்டத்தில் உதவி காவல் ஆய்வாளர் படுகொலை செய்யப்பட்டது அடிப்படைவாதிகளின் செயல்தான்.  இதுவரை பார்த்திராத வழக்குகளையும் தமிழகம் சந்தித்து வருகிறது,  ஒருபுறம் சாத்தான்குளம் போன்ற சம்பவங்களும், மறுபுறத்தில் காவல்துறைக்கு போதிய அதிகாரம் இன்மை போன்ற முரண்பாடுகளும் இருந்து வருகிறது.  இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், அரசை எதிர்த்து கேள்வி கேட்ட ஒரே காரணத்துக்காக பாஜகவினர் 23 பேர் மீது தமிழக அரசு வழக்கு பதிவு செய்துள்ளது என அவர்  குற்றம்சாட்டினார். எதிர்வரும் உள்ளாட்சிமன்ற தேர்தல் பாஜகவின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு ஒரு வாய்ப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார். அதாவது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டு விட்டது என்ற குற்றச்சாட்டுடன் மாநிலத்தில் பயங்கரவாதம் தலைதூக்க எல்லா வாய்ப்புகளும் இருக்கும் என அவர் கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே இதேபோன்ற கருத்து தெரிவித்ததற்காகவே யூடியூப்பர் மாரிதாஸ் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் அண்ணாமலை ஆதே கருத்தை கூறி உள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

click me!