அண்ணாமலை ரெண்டு ஊழல் குற்றச்சாட்டு சொன்னாரே... மு.க. ஸ்டாலின் பதில் சொன்னாரா..? ஆர்.பி. உதயகுமார் கேள்வி!

Published : Jun 06, 2022, 10:21 PM IST
அண்ணாமலை ரெண்டு ஊழல் குற்றச்சாட்டு சொன்னாரே... மு.க. ஸ்டாலின் பதில் சொன்னாரா..? ஆர்.பி. உதயகுமார் கேள்வி!

சுருக்கம்

திமுக தொண்டர்களே திமுக ஆட்சி மீது அதிருப்தியில் உள்ளனர் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் டிஜிட்டல் திண்ணைப் பிரச்சாரம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார் பங்கேற்று பேசினார். “கருணாநிதி குடும்ப ஆதிக்கத்தின் பிடியிலிருந்து ஏழை எளிய மக்களை காப்பாற்றத்தான் எம்ஜிஆர் அதிமுகவையே தொடங்கினார். கடந்த 50 ஆண்டு கால தமிழக வரலாற்றில் மக்களுக்காகப் பல்வேறு வரலாற்று திட்டங்களை அதிமுக செயல்படுத்தி வந்திருக்கிறது. தற்போது ஆட்சியில் அதிமுக இல்லாவிட்டாலும் தமிழகத்தில் வலுவான சிறந்த எதிர்க்கட்சியாக அதிமுகவே செயல்பட்டு வருகிறது. 

கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. மு.க. ஸ்டாலினுக்கு செல்வாக்கு அதிகரித்துள்ளதாக ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கவே தற்போது திமுகவினர் திராவிட மாடல் என்ற வார்த்தையைத் தொடர்ந்து பயன்படுத்துகின்றனர். திமுக நடத்தும் திராவிட மாடல் பயிற்சி என்பது உதயநிதியை முன்னிலைப்படுத்தும் ஒரு பயிற்சியாகவே உள்ளது. இதுதான் திராவிட மாடல் ஆட்சியா? தாத்தா, மகன், பேரன் என்று வாரிசு அரசியல் செய்வதுதான் திராவிட மாடலா? பெரியார், அண்ணாதுரை, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் வாரிசு அரசியல் செய்யவில்லை.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை திமுக அரசு மீது இரண்டு ஊழல் குற்றச்சாட்டுகளை முன் வைத்து உள்ளார். ஆனால், இதுபற்றி முதல்வர் ஸ்டாலின் விளக்கம் எதுவும் சொல்ல முன்வரவில்லை. திமுக ஆட்சி ஏற்கனவே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஓர் ஆட்சி ஆகும். இந்த அரசின் மீது மக்கள் மிகக் கடுமையான வெறுப்பில் இருக்கிறார்கள். எப்போது அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று மக்கள் எதிர்பார்க்கும் நிலைதான் உள்ளது. திமுக தொண்டர்களே திமுக ஆட்சி மீது அதிருப்தியில் உள்ளனர்” என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஸ்டாலின் ரெடியாக இருங்க.. அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான்.. பிரதமர் மோடி மண்ணில் அமித்ஷா சபதம்!
ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!