தயாநிதிக்கு எதிரே பிஜேபி அண்ணாமலை.. திருமாவுக்கு அடுத்து.. செம்ம சீன்.

By Ezhilarasan BabuFirst Published Aug 2, 2021, 7:38 PM IST
Highlights

அதேபோல், எதிர்க்கட்சியான அதிமுக பல்வேறு அரசியல் காரணங்களுக்காக இந்நிகழ்ச்சியை புறக்கணித்துள்ளது. ஆனாலும் பெரும்பாலான கட்சியினர் கலந்து கொண்டனர் விழாவை சிறப்பித்துள்ளனர். 

கருணாநிதியின் திருவுருவப்படம் திறப்பு விழா நிகழ்ச்சியை அதிமுக புறக்கணித்துள்ள நிலையில், அதன் கூட்டணிக் கட்சியான பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார். இது திமுகவினர் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஒரு மூத்த அரசியல் தலைவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் அவர் இந்த விழாவில் பங்கேற்றது பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. 

அரசியல் என்று வந்துவிட்டால் நிரந்தர எதிரியும் அல்ல நிரந்தர நண்பனும் அல்ல என்பது யாரும் மறுக்க முடியாத நியதியாக உள்ளது. அந்த வகையில் தமிழக அரசியலைப் பொறுத்தவரையில் பாஜகவும் - திமுகவும் எதிரும் புதிருமாக நின்று அரசியல் செய்து வருகின்றன. பாஜக எந்த திட்டத்தை கொண்டுவந்தாலும் திமுக எதிர்ப்பதும், திமுகவின் நடவடிக்கைகளை பாஜக விமர்சிப்பதும் என தமிழகம் அரசியல் களம் பரபரப்புக்கு பஞ்சமின்றி இயங்கி வருகிறது. திமுகவுக்கு நேரெதிரில் நின்று பாஜக அரசியல் செய்தாலும், அதன் மாநிலத் தலைவரான அண்ணாமலைக்கு முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் திருவுருவ பட திறப்பு விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது. 

அதேபோல், எதிர்க்கட்சியான அதிமுக பல்வேறு அரசியல் காரணங்களுக்காக இந்நிகழ்ச்சியை புறக்கணித்துள்ளது. ஆனாலும் பெரும்பாலான கட்சியினர் கலந்து கொண்டனர் விழாவை சிறப்பித்துள்ளனர். இதில் ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவர் உள்ளிட்டோர் கலந்து கொண்ட நிலையில், தமிழக பாஜகவின் மாநில தலைவரான அண்ணாமலையும் பங்கேற்றார். ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் மு.க ஸ்டாலின், தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர். மேலும் கூட்டணி கட்சித் தலைவர்களான கி. வீரமணி,  வைகோ, திருமாவளவன், கே.எஸ் அழகிரி, கே.பாலகிருஷ்ணன், முத்தரசன் ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.இந்த வரிசையில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் கலந்து கொண்டார். 

அதிமுகவுக்கும்-பாஜகவுக்கும் இடையே ஆயிரம் கருத்து முரண்கள் இருந்தாலும், அண்ணாமலை இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது பலரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் அமைந்தது. அதேபோல் கூட்டணி கட்சிகள் அமர்ந்திருந்த வரிசையில் அண்ணாமலைக்கு இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. குறிப்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அருகில் அண்ணாமலை அமர்ந்திருந்தார். இது பலரின் கவரும் வகையில் இருந்தது .

குறிப்பாக அண்ணாமலை  திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறனுக்கு நேர் எதிர் இருக்கையில் அமர்ந்திருந்தார். அது பலரது கவனத்தையும் ஈர்த்தது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு எதிராக வரும் 5 ஆம் தேதி, பாஜக சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என அண்ணாமலை அறிவித்தார். ஆனால் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் இந்த போராட்ட அறிவிப்பை சற்றும் பொருட்படுத்தாத கர்நாடக மாநிலத்தின் புதிய முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, யார் வேண்டு மானாலும் உண்ணாவிரதமிருந்து போகட்டும், அது குறித்து எங்களுக்கு கவலை இல்லை. அணையை கட்டியே தீருவோம் என சக பாஜக தலைவரின் போராட்டத்தை உதாசீனப்படுத்தும் வகையில் பேசினார். 

இந்நிலையில் செய்தியாளர்களின் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த திமுக எம்.பி தயாநிதி மாறன், இந்த விவகாரம் தொடர்பாக அண்ணாமலையை கிண்டல் செய்யும் வகையில் கருத்து தெரிவித்தார். அதாவது, கர்நாடக முதலமைச்சர் உடன் பேச்சுவார்த்தை நடத்த மாவீரன் அண்ணாமலையை தூதுவராக அனுப்புவோம் என நக்கல் அடித்தார். இதில் டென்ஷனான அண்ணாமலை,  டி20 போட்டியை ரசித்துக்கொண்டிருந்த தயாநிதிமாறன், மேகதாது அணை பற்றி கவலைப்பட்டதற்கு மிக்க நன்றி என்றும், தங்கள் சிறப்பு விமானத்தை அனுப்பி வைத்தால், நம் மாநில ஏழை விவசாயிகளை அழைத்துக்கொண்டு, தூது செல்ல நான் தயார், ஆனால் இதை உங்கள் மாமா திரு. மு.க ஸ்டாலின் அனுமதிப்பாரா என தயாநிதிமாறனுக்கு கேள்வி எழுப்பி இருந்தார். 

இப்படி இரு தலைவர்களும் ஒருவரை மாற்றி ஒருவர் விமர்சித்து கொண்டது,  திமுக, பாஜக இடையே புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. இந்த வார்த்தை போருக்கு இடையில் கருணாநிதியின் படத்திறப்பு விழாவில் கலந்து கொண்ட அண்ணாமலைக்கு தயாநிதிமாறன் இருக்கைக்கு எதிரில் இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் அண்ணாமலை மற்றும் தயாநிதி மாறனின் ரியாக்ஷன் என்ன என்பதை  கவனிப்பதிலேயே ஆர்வமாக இருந்தனர். 

அதேபோல், விடுதலை சிறுத்தைகளும்- பாஜகவும்  கீரியுமாக பாம்பும் சீறிவரும் நிலையில், விசிக தலைவர் தொல். திருமாவளவனின் அருகில் அண்ணாமலை அமர்ந்திருந்தார். ஆனால் இரு தலைவர்களும் பரஸ்பரம் மரியாதையை பகிர்ந்து கொண்டனர். அரசியல் பகை முரண் கலைந்து எதிர் எதிர் துருவத்தில் அரசியல் செய்யும் தலைவர்கள் அருகருகே அமர்ந்து நிகழ்ச்சியல் கலந்து கொண்டது பார்வையாளர்கள் மத்தியில் சுவாரஸ்யத்தையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது. குறிப்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டது பாஜக தொண்டர்கள் மத்தியில் மட்டும் அல்ல, திமுக தொண்டர்கள் மத்தியிலேயே மிகுந்த வரவேற்பையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

 

click me!