தமிழகத்தில் டாஸ்மாக் சாராயத்தின் விற்பனையை உயர்த்த எடுக்கும் முயற்சியை கூட விவசாயத்துக்காக இந்த தமிழக அரசு முயற்சிகள் எதுவும் எடுக்கவில்லை என அண்ணாமலை குற்றம்சாட்டினார்.
அண்ணாமலைக்கு பாராட்டு விழா
டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி எடுக்க மத்திய அரசு டெண்டர் வெளியிட்ட நிலையில், இதற்கு திமுக அதிமுக, காங்கிரஸ்,பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதனையடுத்து மத்திய அமைச்சரை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சந்தித்து நிலக்கரி திட்டத்திற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பது தொடர்பாக கோரிக்கை மனு அளித்திருந்தார். இதனையடுத்து இந்த திட்டத்தை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்தது. டெல்டா பகுதியில் நிலக்கரி சுரங்க ஒப்பந்த அனுமதியை ரத்து செய்ய வைத்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு நன்றி மற்றும் பாராட்டு விழா கூட்டம் தஞ்சை பனகல் கட்டடம் அருகில் விவசாய தமிழர் விழிப்புணர்வு நலச்சங்கம் சார்பில், நடைபெற்றது. இக்கூட்டத்தில், கலந்து கொண்ட பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார்.
பாசன பரப்பு குறைந்துள்ளது
அப்போது அவர் கூட்டத்தில் பேசும் போது, தமிழகத்தில் உள்ள விவசாயிகள் மாத்தி யோசித்து அரசியல் சிந்தனை பெற வேண்டும். தமிழகத்தில் டாஸ்மாக் சாராயத்தின் விற்பனையை உயர்த்த எடுக்கும் முயற்சியை கூட விவசாயத்துக்கு இந்த தமிழக அரசு முயற்சிகள் எதுவும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டினார். 1960ஆம் ஆண்டு தமிழகத்தில் பாசன கால்வாய்கள் மூலம் சாகுபடி நிலப்பரப்பு 11 சதவீதமாக இருந்து 2023-ல் 3.4 சதவீதமாக குறைந்துள்ளது.
மேலும் 1960-ல் 61 லட்சம் ஹெக்டேராக இருந்த பாசன பரப்பு கடந்த 63 ஆண்டுகளில் 45 லட்சம் ஹெக்டேராக மாறி, 16 லட்சம் ஹெக்டேர் பாசன பரப்பு குறைந்துள்ளது. இதுதான் திராவிட மாடல் ஆட்சியின் சாதனையா என கேள்வி எழுப்பினார். நம் டெல்டா பகுதி விவசாயிகள் நலனுக்காக, பாரதிய ஜனதா கட்சி எப்பொழுதும் உறுதுணையாக இருக்கும் என்றும், பாஜக ஆட்சிக்கு வந்து எங்கள் முதல்வரின் முதல் கையெழுத்தே விவசாயிகள் நலம் சார்ந்ததாகத்தான் இருக்கும் என்றும் உறுதி அளித்தார்.
உண்மையான டெல்டாகாரன் யார்.?
தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் திமுக ஆட்சியில் இருந்த போது கடந்த 2011 ஆம் ஆண்டு தமிழக துணை முதல்வராக இருந்த ஸ்டாலின்தான் மீத்தேன் எடுக்கும் திட்டத்தில் கையெழுத்து போட்டதாக விமர்சித்தார். காவிரி நதி நீர்ப் பிரச்சனை தொடங்கி, வடசேரி எரிசாராய ஆலை என ஆண்டாண்டு காலமாக டெல்டா பகுதிக்கு தொடர்ச்சியாக திமுக துரோகம் இழைத்து வருகிறது என குறிப்பிட்டார்.
ஆனால், டெல்டாகாரன் என சிலர் கூறிக் கொள்கிறார்கள். உண்மையான டெல்டாகாரன் யார் என்றால் நம்மாழ்வார், எம்.எஸ்.சுவாமிநாதன், உ.வே.சா, சிவாஜி கணேசன் ஆகியோர்தான். விவசாயிகளுக்கு துணை நின்றவர்கள். அதே போல் இங்குள்ள விவசாயிகளும் டெல்டாகாரன்தான். ஆனால், இங்குள்ள விவசாயிகளுக்கு எந்த வசதியும் செய்து தராமல் நானும் டெல்டாகாரன் என முதல்வர் ஸ்டாலின் கூறுவதை எப்படி ஏற்க முடியும் என விமர்சித்தார்.
இதையும் படியுங்கள்