
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது பி.சி.ஆர் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெல்லை காவல் ஆணையரிடம் புகார் கொடுத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தததியுள்ளது.
நெல்லை தச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் சமூக ஆர்வலர் முருகன். இவர் நெல்லை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், டுவிட்டரில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் பக்கத்தை பின்தொடர்கிறேன். அண்ணாமலை மோடியை வாழ்த்தி வெளியிட்ட பதிவில் இந்தியாவின் வளர்ச்சியை குறிப்பிடும்விதமாக from a pariah to viswa guru என்று குறிப்பிட்டு பதிவு செய்துள்ளார். pariah (பறையா) என்றால் உலக அளவில் ஒதுக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட அல்லது கீழானவர்கள் என பலபொருள் தரும்படி சொல்லப்படுகிறது.
இந்தியாவில் தீண்டத்தகாதவர்கள், இழிவானவர்கள் என்று குறிக்கும் அண்ணாமலை இதுபோன்று குறிப்பிட்ட சாதியை இழிவுப்படுத்தும் விதமாக பதிவு வெளியிடுகிறார். எனவே அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவுசெய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் புகார் மனுவில் கூறியிருந்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய முருகன்;- பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்ந்து இதுபோன்று இழிவாக பேசி வருகிறார். பறையா என்ற வார்த்தை சட்டப்படி பயன்படுத்த கூடாது. எனவே அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆணையரிடம் மனு அளித்துள்ளேன் என்றார். இதேபோன்று சென்னை அடுத்த ஆவடி ஆணையர் அலுவலகத்தில் அண்ணாமலை மீது வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்ககோரி கொரட்டூரைச் சேர்ந்த அரிவேந்தன் என்பவர் புகார் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.