நயினார் நாகேந்திரனின் கருத்து பாஜகவின் நிலைப்பாடு அல்ல... ஈபிஎஸ்ஸிடம் வருத்தம் தெரிவித்த அண்ணாமலை!!

By Narendran SFirst Published Jan 26, 2022, 5:43 PM IST
Highlights

நயினார் நாகேந்திரன் பேசிய கருத்து பாஜகவின் நிலைப்பாடு அல்ல என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியிடம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வருத்தம் தெரிவித்துள்ளார். 

நயினார் நாகேந்திரன் பேசிய கருத்து பாஜகவின் நிலைப்பாடு அல்ல என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியிடம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வருத்தம் தெரிவித்துள்ளார். அரியலூர் மாணவி மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி தமிழக பாஜக சார்பில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற இந்த உண்ணாவிரத போராட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், திருநெல்வேலி எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது பேசிய நயினார் நாகேந்திரன், தமிழகத்தில் அதிமுக, எதிர்க்கட்சி போல செயல்படவில்லை. பாஜக, எதிர்க்கட்சியாக இல்லை என்றாலும் கூட துணிந்து கேள்வி எழுப்புகிறது. சட்டசபையில் ஆண்மையோடு பேச அதிமுக-வில் ஒரு எம்எல்ஏ கூட இல்லை என கூறினார்.

நயினார் நாகேந்திரனின் இந்த கருத்தால் அதிமுக – பாஜக கூட்டணி இடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்ததால்தான் சட்டசபை தேர்தலில் படுதோல்வி அடைந்தது என அதிமுக கழக அமைப்புச் செயலாளர் சுதா பரமசிவம் தெரிவித்துள்ளார். மேலும் நயினார் நாகேந்திரன் எங்கள் தயவால் எங்கள் ஆதரவால் தாமரை சின்னத்தை நாங்கள் தூக்கி நிறுத்தி வெற்றி பெற வைத்தோம். ஆனால் எங்களைப் பற்றிய நயினார் நாகேந்திரன் இப்படி பேசி வருகிறார். 2001 ஆம் ஆண்டு ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்ட நயினார் நாகேந்திரன், அப்போது தொழில்துறை, மின்சாரத்துறை, ஊரக தொழில்துறை உள்ளிட்ட அமைச்சராகவும் இருந்துள்ளார். ஆனால் இப்போது அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஆண்மை இருக்கிறதா என கேட்கக் கூடிய கேள்விக்கு நாங்கள் ஒரே பதிலை சொல்கிறோம். நயினார் நாகேந்திரன் வேண்டுமானால் நெல்லை சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து விட்டு மீண்டும் இதே தொகுதியில் அவர் போட்டியிட்டு வெற்றி பெறட்டும்.

அப்போது நாங்கள் அவருக்கு ஆண்மை இருக்கிறது என சொல்வோம் என்று தெரிவித்துள்ளார். இந்த நிலையில் நயினார் நாகேந்திரன் பேசிய கருத்து பாஜகவின் நிலைப்பாடு அல்ல என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியிடம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வருத்தம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், நயினார் நாகேந்திரனின் கருத்து பாஜகவின் நிலைபாடு இல்லை. வார்த்தை தவறுதலாக வந்துவிட்டது. இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமியிடம் தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்தேன். அதிமுக, எதிர்க்கட்சியாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதிமுக – பாஜக கூட்டணியில் எந்த சலனமும் ஏற்படாமல் பார்த்துக்கொள்வோம். பல இக்கட்டான சூழ்நிலைகளில் பாஜகவிற்கு அதிமுக துணை நின்றுள்ளது என்று தெரிவித்துள்ளார். 

click me!