அண்ணா பிறந்த நாள் விழாவில் அதிசயம் !! கொடி, பேனர் இல்லாத அதிமுக நிகழ்ச்சி !!

By Selvanayagam PFirst Published Sep 15, 2019, 7:26 PM IST
Highlights

சாலைகளில் பேனர் கொடிகள் இல்லாமல், அண்ணாவின் 111ஆவது பிறந்தநாளான இன்று அண்ணாவின் சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
 

சென்னையில் திருமண நிகழ்ச்சி ஒன்றுக்கு வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்து சுபஸ்ரீ என்ற இளம்பெண் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து நீதிமன்றம் பேனர் வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகராட்சி, காவல் துறைக்கு அறிவுரை வழங்கியது. 

இதனைத் தொடர்ந்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கட்சியினர் யாரும் பேனர் வைக்கக் கூடாது என கூறியிருந்தனர்.

மேலும், ”அதிமுக கட்சியினர் கட்சி நிகழ்ச்சிகளுக்கோ, தங்கள் இல்ல நிகழ்ச்சிகளுக்கோ வரவேற்பு என்ற பெயரிலும், விளம்பரம் என்ற முறையிலும் மக்களுக்கு இடையூறு செய்யும் பேனர்கள் வைப்பதை அன்புகூர்ந்து நிறுத்திட வேண்டுமென்று அதிமுக கட்சியின் உறுப்பினர்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். மக்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தும் எந்த ஒரு செயலிலும் கட்சியினர் ஈடுபடவே கூடாது. 

எனவே எந்த சூழ்நிலையிலும், எந்த காரணத்திற்காகவும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கட்அவுட், பேனர்கள் வைப்பது முற்றிலும் தவிர்க்க வேண்டும் எனவும் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் கூறியிருந்தனர்.

இந்நிலையில் அண்ணா பிறந்த நாளையொட்டி சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணாவின் திருவுருவ சிலைக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. 

இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். நீதிமன்றத்தின் கடுமையான உத்தரவால் அண்ணாசாலையில் எந்த இடத்திலும் பேனர் கொடி தோரணங்கள் எதுவும் வைக்கப்படவில்லை .


இந்த நிகழ்ச்சியைப் பார்த்த பொது மக்கள் ஆச்சரியப்பட்டனர். இது தொடர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

click me!