
மாணவி அனிதாவின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூற தீபா மற்றும் மாதவன் நாளை அரியலூர் செல்ல உள்ளதாகவும், அவரின் குடும்பத்தாருக்கு நிதி உதவி அளிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
மருத்துவ படிப்பில் இடம் கிடைக்காத ஏக்கத்தில் அரியலூர் மாணவி அனிதா கடந்த 1 ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மாணவி அனிதாவின் தற்கொலைக்குப் பிறகு, தமிழகம் முழுவதும் நீட் தேர்வுக்கு எதிராகவும், அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டும் போராட்டங்கள் வெடித்தன.
இந்த போராட்டத்தில் அரசியல் கட்சிகள், அமைப்புகள், மாணவர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டனர்.
மாணவி அனிதாவின் இறப்புக்குப் பிறகு, அவரின் குடும்பத்துக்கு சென்ற அரசியல் கட்சி தலைவர்களும், சினிமா பிரமுகர்கள் சிலரும் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினர். அது மட்டுமல்லாது உயிரிழந்த மாணவியின் குடும்பத்துக்கு நிதியுதவியும் அவர்கள் அளித்தனர்.
இந்த நிலையில், அனிதாவின் வீட்டுக்கு, ஜெயலலிதாவின் அண்ணன் மகளும், எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை தலைவருமான தீபா வருகை குறித்து தகவல் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
அனிதாவின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூற நாளை தீபா மற்றும் அவரின் கணவர் மாதவன் வர உள்ளதாகவும், அனிதாவின் குடும்பத்தாருக்கு நிதியுதவி அளிக்கப்பட உள்ளதாகவும், தீபா அணியைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.