ஆந்திர மாநில வேலை வாய்ப்பு ஆந்திர மக்களுக்கே !! அதிரடியாக சட்டம் போட்ட ஜெகன் மோகன் !!

By Selvanayagam PFirst Published Jul 23, 2019, 10:46 PM IST
Highlights

ஆந்திர மாநிலத்தில்  உள்ள தனியார் துறையில் 75 சதவீத வேலை வாய்ப்புகளை உள்ளூர் மக்களுக்கே வழங்க  வகை செய்யும் புதிய சட்ட மசோதா ஆந்திர மாநில சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
 

ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி முதலமைச்சராக பதவியேற்ற பிறகு பல புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மேலும் தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார். 

தேர்தலின் போது இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்தார்.  தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதியின் படி,  ஒரே நேரத்தில் 4.01 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க முடிவு செய்து வரும் காந்தி ஜெயந்தி அன்று பணி நியமன ஆணையை வழங்க  உள்ளார். 

இந்நிலையில் நாட்டிலேயே முதன்முறையாக தனியார் துறையில் 75 சதவீத வேலைவாய்ப்பை உள்ளூர் மக்களுக்கு வழங்க வகைசெய்யும் மசோதாவை ஆந்திர மாநில அரசு நிறைவேற்றியுள்ளது.

இந்த மசோதாவின் படி, உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் பொருட்டு அரசு உதவி பெறும் மற்றும் அரசு உதவி பெறாத தொழிற்சாலைகள், நிறுவனங்களில் உள்ள பணிகளில் 75 சதவீதத்தை உள்ளூர்வாசிகளுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

உள்ளூர் பணியாளர்களக்கு திறன் இல்லை எனக் கூறி அதிகப்படியாக வெளி ஆட்களை பணிக்கு எடுக்கக் கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது. 

மாறாக திறமையற்றவர்களாக கருதப்படுபவர்களுக்கு அரசின் தொழிற்பயிற்சி மையங்கள் மூலம் திறன் பயிற்சி அளிக்க வேண்டும் என்றும் அந்த சட்ட மசோதாவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

click me!