முதல்வர் ஸ்டாலினை பாராட்டிய பாமக.. கொரோனா நிவாரணமாக ஒரு மாதம் ஊதியத்தை வழங்கிய அன்புமணி..!

By vinoth kumarFirst Published May 18, 2021, 4:56 PM IST
Highlights

கொரோனா தடுப்பு பணிகளுக்காக, முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தனது ஒரு மாத ஊதியத்தை பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வழங்கியுள்ளார்.

கொரோனா தடுப்பு பணிகளுக்காக, முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தனது ஒரு மாத ஊதியத்தை பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வழங்கியுள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு  மருத்துவர் அன்புமணி ராமதாஸ் எழுதியுள்ள கடிதத்தில்;-  தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்ற பின்னர், தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக தாங்கள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு  எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்துவதும், அதிலிருந்து மக்களைக் காப்பதும் மிகவும் சவாலான  பணி என்பதில் ஐயமில்லை. 

கொரோனா தடுப்புப் பணிகளுக்காக அனைத்துத் தரப்பினரும் நிதி வழங்கும்படி தாங்கள் வேண்டுகோள் விடுத்திருந்ததையடுத்து, பாட்டாளி மக்கள் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்களின் ஒரு மாத ஊதியத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடையாக வழங்குவார்கள் என்று மருத்துவர் அய்யா ராமதாஸ் அறிவித்திருந்தார். மருத்துவர் அய்யா அவர்கள் அறிவித்தவாறு எனது ஒரு மாத ஊதியமான 1,89,000 ரூபாயை வங்கிப் பரிமாற்றத்தின் மூலம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்திருக்கிறேன்.  

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தி, பொது மக்களைக் காப்பாற்றுவது  தான் நமது முதல் பணியாகும். அதற்காக தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பாட்டாளி மக்கள் கட்சியும், மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் மருத்துவர் என்ற முறையில் நானும் அனைத்து வழிகளிலும் முழு ஒத்துழைப்பு அளிப்போம் என்று உறுதியளிக்கிறேன் என அன்புமணி கூறியுள்ளார். 

click me!