கி.ரா மறைவிற்கு அரசு மரியாதை... கனத்த இதயத்துடன் முதல்வரின் முதல்வரின் முடிவை வரவேற்ற கி.வீரமணி...!

By Kanimozhi PannerselvamFirst Published May 18, 2021, 4:43 PM IST
Highlights

தமிழின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவரான கி. ராஜநாராயணன் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

தமிழின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவரான கி. ராஜநாராயணன் கடந்த சில நாட்களாகவே உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், நேற்றிரவு காலமானார். கி.ராவின் மறைவிற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கி.ராவின் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடத்த வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.

கி.ராவின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ள திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவிப்பையும் வரவேற்றுள்ளார். இதுகுறித்து தி.க.சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கரிசல் குயில் என்று போற்றப்படும் முதுபெரும் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் அவர்கள் தனது 99-ஆம் வயதில் வயதுமூப்பு காரணமாக நேற்று இயற்கை எய்தினார் (17.05.2021) என்பதை அறிந்து வருந்துகிறோம்.

தமிழகத்தின் கோவில்பட்டியை அடுத்த இடைச்சேவல் என்னும் கிராமத்தில் பிறந்து, அம் மக்களின் பண்பாட்டை, வாழ்வியலைக் கதைகளாக்கி உலகெங்கும் உலவவிட்டவர். கரிசல் எழுத்துகளுக்கென்று களம் அமைத்தவர். தமிழின் மிகச் சிறந்த படைப்பாளியாகவும், படைப்பாளிகளை உருவாக்கவும், ஊக்குவிக்கவும் பெரும் பங்காற்றியவராகவும் அவரது வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்.இந்திய விடுதலைப் போராட்டம், இடதுசாரி இயக்கம் என்று அரசியல் பாதைகளிலும் பயணித்தவர். இறுதிவரைக்கும் எழுத்துப் பணியைத் தொடர்ந்தவர். ஒரு நூற்றாண்டின் எழுத்துச் சாட்சியமாகத் திகழ்ந்தவர்.

திராவிட இயக்க எழுத்தாளர்களின் மீதான சிலரின் வன்மப் பார்வைக்கு பார்ப்பனிய சிந்தனையே காரணம் என்பதை வெளிப்படையாகச் சொல்லத் தயங்காதவர். தந்தை பெரியாரின் மனித நேயத்தையும், சமூகப் பணியையும் போற்றி, “புதிய வழிகாட்டி” என்று விளித்து மதித்தவர். மனதில் பட்டதை மறைக்கும் தன்மையின்றி, உண்மையை வெளிப்படுத்தக் கூடியவர்.அவரது எழுத்தைச் சிறப்பித்து புதுவை பல்கலைக்கழகத்தில் சிறப்பு பேராசிரியராக அழைக்கப்பட்டு, புதுச்சேரியிலேயே தம் வாழ்வை அமைத்துக் கொள்ளும் வகையில் சிறப்பிக்கப்பட்டவர். 

தமிழக அரசின் பரிசு, சாகித்திய அகாடமி விருது, கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் விருது உள்ளிட்ட பல சிறப்புகளையும் பெற்றவர்.அவரது மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கு மிகப்பெரிய இழப்பாகும். அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினர், எழுத்தாளர்கள், வாசகர்கள் மற்றும் நண்பர்களுக்கு நமது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.சிறப்புக்குரிய கி.ரா. அவர்களுக்கு அரசு மரியாதையோடு இறுதி நிகழ்ச்சி நடைபெறும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்திருப்பது பொருத்தமானதும், வரவேற்கத்தக்கதுமாகும் என குறிப்பிடப்பட்டுள்ளார். 

click me!