
தூத்துக்குடி, கடலூர், ராணிப்பேட்டை சிப்காட்டுகளில் உலக சுகாதார நிறுவனத்தை வைத்து ஆய்வு செய்ய வேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சு வாயுவினால், குமரெட்டியாபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராம மக்கள் மூச்சுத்திணறல், தொண்டை வலி, தோல் நோய், கண் பார்வை குறைபாடு உள்ளிட்ட பல நோய்களுக்கு ஆளாகியுள்ளனர். அதனால் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி 100 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
போராட்டத்தின் நூறாவது நாளான நேற்று, ஆட்சியர் அலுவலகத்திற்கு பேரணியாக சென்றனர். ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்ட இந்த பேரணியை போலீஸார் தடுக்க முயன்றனர். ஆனால் போலீஸாரின் தடைகளை மீறி ஆட்சியர் அலுவலகத்துக்கு போராட்டக்காரர்கள் சென்றனர். இதை தடுக்கும் விதமாக போலீஸார் தடியடி நடத்த, போராட்டக்காரர்கள் பதிலுக்கு கற்களால் தாக்க, போராட்டக்களம் போர்க்களமானது. வன்முறை வெடித்தது. போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், 11 பேர் உயிரிழந்தனர். இந்த கோர சம்பவம் தமிழக மக்களிடையே கடும் கோபத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
உடல் ஆரோக்கியத்துக்காகவும் உயிரைக் காப்பாற்றவும் போராடிய மக்களின் உயிரை போலீஸே சுட்டு வீழ்த்திய சம்பவம், மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இந்த கொடூர சம்பவம் தொடர்பாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அன்புமணி, சுத்தமான காற்று மற்றும் நீரை மக்களுக்கு கொடுக்க வேண்டியது அரசின் கடமை. அதற்காக போராடிய மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. துப்பாக்கிச்சூடு நடத்திய காவலர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீது 302 பிரிவின் கீழ் கொலை குற்றம் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 25 லட்சம் ரூபாயும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு 10 லட்சம் ரூபாயும் இழப்பீடு வழங்க வேண்டும்.
உலக சுகாதார நிறுவனத்தை வைத்து, தூத்துக்குடி, கடலூர், ராணிப்பேட்டை ஆகிய சிப்காட்டுகளை ஆய்வு செய்து, சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய வேண்டும். சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுத்தும் ஆலைகளுக்கு கடும் நிபந்தனைகளை விதிக்க வேண்டும் என அன்புமணி வலியுறுத்தினார்.