
தமிழகத்தில் பாஜக முழுமையாக வளரவில்லை என்றும் வளர்ந்து வருவது போன்று ஒரு மாய தோற்றத்தை உருவாக்குகின்றனர் என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் அடுத்த தலைமுறையைக் காப்பாற்ற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இளைய தலைமுறையினரை காப்பாற்றியாக வேண்டும். ஒருபக்கம் மதுபழக்கம், மற்றொரு பக்கம் போதைப் பொருட்கள் பழக்கம். மேலும் ஆன்லைன் சூதாட்டம் என இந்த மூன்றும் இளைஞர்களை சீரழித்து வருகிறது. ஆன்லைன் சூதாட்டத்தில் அதிகளவில் தற்கொலை சம்பவம் நடைபெற்று வருவதாக முதல்வரிடமும், ஆளுநரிடம் தெரிவித்துள்ளேன். எனவே ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக தனி சட்டம் வேண்டும். கலைஞர் எனக்கு மிகவும் பிடித்த தலைவர். சமூக நீதிக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தியவர். இதன் மூலம் தமிழகத்தில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தவர். ஐயா ராமதாஸ் மற்றும் கலைஞர் கருணாநிதி இருவரையும் ஒரு கண்ணோட்டத்தில் பார்க்கிறேன்.
எனவே இந்தியாவிலேயே தலைசிறந்த தலைவர் கலைஞர் அவர்கள், இந்நாளில் நிச்சயம் அவரை நாம் போற்றுவோம். மருத்துவக் கல்வி வணிகம் ஆவதை தடுக்கும் நோக்கிலும், தகுதியற்ற மருத்துவர்கள் உருவாகுவதை தடுக்கவும் தான் நீட் தேர்வு கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது நீட் தேர்வு முழுவதும் வணிகமாகிவிட்டது. இதனால் தகுதியுள்ள மாணவர்கள் ஏழை என்பதால் வாய்ப்பு மறுக்கப்படுகிறது. இதேபோன்று நீட் விவகாரத்தில் மற்ற மாநிலங்களுடன் தமிழகத்தை ஒப்பிடக்கூடாது. நீட்தேர்வு காரணமாக 60 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். நீட் தேர்வு பயிற்சி மையங்கள் மட்டும் ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி வருவாயை ஈட்டுகிறது. நீட் தேர்வு தற்போது வணிக மயமாகி விட்டது. இதனால் தமிழகத்தில் உள்ள ஏழை மாணவர்களுக்கும், கிராமப்புற மாணவர்களுக்கும் மருத்துவ கல்வி மறுக்கப்படுகிறது. ஆகையால் தான் குறிப்பிட்ட காலத்திற்கு நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு வேண்டும் என்று கேட்கிறோம். எந்த மாநிலமாக இருந்தாலும் ஆளுநருக்கும், முதல்வருக்கும் இடையே சுமூகமாக உறவு இருக்க வேண்டும்.
ஆளுநர் அரசியல் செய்யக்கூடாது. இதனால் பாதிக்கப்படுவது மாநில மக்கள் தான். தமிழ் மக்களின் நலன், பிரச்சினைகளை புரிந்து கொண்டு ஆளுநர் அவர்கள் அதற்கான தீர்வை ஏற்படுத்த வேண்டும். 8 மாதத்திற்கு மேலாக கொரானா தடுப்பு நடவடிக்கைக்காக தமிழக அரசும், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களும் சிறப்பாக பணியாற்றி உள்ளனர். சுகாதாரத் துறையில் இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பாஜக இந்தியாவில் பெரிய கட்சி. தமிழகத்தை பொருத்தவரை சிறிய கட்சி தான். தமிழகத்தில் கன்னியாகுமரி உட்பட ஒரு சில இடங்களில் மட்டுமே வளர்ந்து வருகிறது. தமிழகத்தில் பாஜக முழுமையாக வளரவில்லை, வளர்ந்து வருவது போன்று ஒரு மாய தோற்றத்தை உருவாக்குகின்றனர். தமிழகத்தில் உண்மையான எதிர்க்கட்சியாக பாஜக உள்ளதாக கூறி வருகின்றனர். ஆனால் மேகதாது அணை பிரச்சினையை எதிர்த்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை போராடுவாரா? கர்நாடகா சென்று போராடுவாரா? என்று கேள்வி எழுப்பினார்.