
பொதுக்கூட்ட மேடையிலேயே கள்ள ஓட்டுப் போடுவது பற்றி பகிரங்கமாகப் பேசிய அன்புமணி ராமதாஸ் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க. தேர்தல் கமிஷனுக்கு வேண்டுகோள் வைத்துள்ளது.
நேற்று திருப்போரூர் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பாமகவை சேர்ந்த அன்புமணி ராமதாஸ் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் அப்போது பேசிய அவர்,”நமது கூட்டணி வலுவான கூட்டணி. நம் கூட்டணியில் ஏராளமான கட்சிகள் உள்ளன. நமக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. எதிரணியில் உள்ள தி.மு.க. கூட்டணியில் சில ஆயிரம் வாக்குகள் மட்டுமே உள்ளன.
இருந்தாலும் என்ன, ஓட்டுப்போட அவர்கள் வாக்குச்சாவடிக்கு தானே வரவேண்டும். வாக்குச்சாவடிகளில் நாம் தானே இருப்போம், புரிகிறதா? என பேசினார்.இதே கருத்தை தொடர்ந்து 3 முறை புரிகிறதா? என கேட்டு, நாம் மட்டுமே இருக்கும்போது என்ன நடக்கும்? என்று குறிப்பிட்டார்.
அன்புமணி ராமதாஸ் தெரிவித்த கருத்து எதிர்க்கட்சிக்கு செல்லும் வாக்குகளை செல்லவிடாமல் தடுக்கும் வகையில் அமைந்திருப்பதால் அவரது பேச்சுக்கு தி.மு.க. கடும் ஆட்சேபணை தெரிவித்துள்ளது. வாக்குச்சாவடிகளை கைப்பற்றும் நோக்கத்தில் அவர் இந்த கருத்தை தெரிவித்ததாக தேர்தல் கமிஷனில் திமுக சார்பில் இன்று புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் அன்புமணி நேற்று சர்ச்சைக்குரிய விதத்தில் பேசியதற்காக புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.மேலும் அன்புமணி மீது வழக்குப்பதிவு செய்ய திருப்போரில் தேர்தல் அலுவலருக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.