
கிருஷ்ணரைப் பற்றி கி. வீரமணி சர்ச்சையாக பேசியிருந்தால் அது தவறுதான். ஆனால் அவர் உள்நோக்கத்தோடு எதுவும் பேசவில்லை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
பொள்ளாச்சி பாலியல் விவகாரம் குறித்து பேசும் போது கடவுள் கிருஷ்ணரை ஒப்பிட்டு, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, பேசிய பேச்சு சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதனால் இந்து அமைப்பினர் கடும் கோபமடைந்துள்ளனர். இந்நிலையில் திருச்சி தேர்தல் பிரச்சாரத்தில் தி.க.வினர் மீது இந்து அமைப்பினர் செருப்புகளையும், கற்களையும் வீசி தாக்குதல் நடத்தினர். இதில் 3 பேர் காயமடைந்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கிருஷ்ணர் குறித்த பேச்சுக்காகத்தான் இந்த தாக்குதல் என கூறப்பட்டது.
இந்நிலையில் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த மு.க.ஸ்டாலின் கி.வீரமணி அப்படி பேசியிருந்தால் அது தவறுதான் என்று கூறினார். ஆனால் அவர் உள்நோக்கத்தோடு எதையும் பேசவில்லை. உதாரணம் காட்டி பேசினார் வீரமணி. ஆனால் தேர்தல் களத்தில் ஆர்எஸ்எஸ் போன்ற இந்து அமைப்பினர் திரித்து மக்களிடம் கொண்டு செல்கிறார்கள். மேலும், தனது மனைவி கடவுள் நம்பிக்கை உள்ளவர் என்றும், காலை, இரவு என கடவுள் வழிபாடு செய்யக்கூடியவர் என்றும், அதில் தலையிடாமல் இருக்க வேண்டும் என்பதுதான் நான் பின்பற்றும் கொள்கை.
திமுகவை பொறுத்தவரை, அண்ணாவின் கொள்கை ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்பது. கலைஞர் கூட பராசக்தி வசனத்தில் தெளிவாகக் கூறியிருப்பார், கோயில்கள் கூடாது என்பதற்காக அல்ல, கோயில்கள் கொடியவர்கள் கூடாரமாக ஆகிவிடக்கூடாது என்பது தான் நாங்கள் பின்பற்றும் கொள்கை என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.