ஆபத்தை விலைகொடுத்து வாங்காதீர்கள்..! மத்திய அரசை எச்சரிக்கும் அன்புமணி..!

By Manikandan S R SFirst Published May 21, 2020, 3:48 PM IST
Highlights

பருவநிலை மாற்றத்தின் தீய விளைவுகள் பூவுலகை அடுத்தடுத்துத் தாக்கத் தொடங்கிவிட்டன. இந்த நேரத்தில் நமது கவனம் முழுவதும் இயற்கையையும் சுற்றுச்சூழலையும் காப்பதில்தான் இருக்க வேண்டும். ஆகையால், ஆபத்தை விலை கொடுத்து வாங்கும் நிலக்கரிக் கொள்கையை இந்திய அரசு கைவிட வேண்டும். அதற்கு மாற்றாக சூரிய ஒளி மற்றும் காற்றாலை மின் திட்டங்களை அதிக அளவில் செயல்படுத்தி சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், அதன் மூலமாக புவி வெப்பமாதலின் தீய விளைவுகளைக் கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

பூவுலகைக் காக்க நிலக்கரிக் கொள்கையைக் மத்திய அரசு கைவிட வேண்டும் என மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவரது முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது: இந்தியாவைத் தற்சார்புப் பொருளாதாரமாக மாற்றும் நோக்குடன் நிலக்கரிப் பயன்பாட்டை ஊக்குவிக்கும் கொள்கையை ஒன்றிய அரசு அறிவித்திருக்கிறது. பருவநிலை மாற்றத்தையும், அதன் தீய விளைவுகளையும் கட்டுப்படுத்துவதற்காக ஐநா சபை வகுத்தளித்துள்ள பாதைக்கு எதிர்த்திசையில் பயணிக்கும் இக்கொள்கை மிக ஆபத்தானதும், பேரழிவை ஏற்படுத்தக் கூடியதும் ஆகும். பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக 500 நிலக்கரிச் சுரங்கங்கள் ஏல முறையில் தனியாருக்கு வழங்கப்படும் என்றும், முதல் கட்டமாக 50 சுரங்கங்கள் உடனடியாக வழங்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது. அது மட்டுமின்றி, நிலக்கரியைக் கையாளும் கட்டமைப்புகளை உருவாக்க ரூ.50,000 கோடி செலவிடப்படும் என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருக்கிறார்.

பசுமை மின்சாரம் தத்துவத்தைப் பன்னாட்டு அமைப்புகள் வலியுறுத்திவரும் நிலையில், நிலக்கரிப் பயன்பாட்டை அதிகரிக்க இந்திய அரசு திட்டமிடுவதானது, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இந்தியாவைப் பல பத்தாண்டுகள் பின்னோக்கித் தள்ளிவிடும். உலகம் இப்போது எதிர்கொண்டுவரும் மிகப் பெரிய நெருக்கடியான கரோனா உருவானதற்கு முக்கியக் காரணம் பருவநிலை மாற்றம் ஆகும். புவி வெப்பமாதலை 2030-க்குள் 1.5 டிகிரி செல்சியஸுக்குள் கட்டுப்படுத்தாவிட்டால், பேரழிவுகளை உலகம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். புவி வெப்பமாதலுக்கான முக்கியமான காரணங்களில் முன்வரிசையில் நிற்பவை படிம எரிபொருட்களைப் பயன்படுத்துவதும், நிலக்கரியைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்திசெய்வதும்! 2018-ல் வளிமண்டலத்தில் சேர்ந்த மாசுக்காற்றில் 30% அனல் மின்நிலையங்களிலிருந்து வெளியேற்றப்பட்டதாகும். பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பேரழிவுகளிலிருந்து உலகைக் காக்க இப்போது செயல்பட்டுவரும் அனல் மின்நிலையங்களில் மூன்றில் இரு பங்கை 2030-க்குள் மூட வேண்டும் என்று ஐநா சபையின் பருவநிலை அறிவியலாளர்கள் பேரவை (ஐபிசிசி) அறிவித்துள்ளது. அதேபோல், 2020-க்குப் பிறகு புதிய அனல் மின்நிலையங்களை அமைக்கக் கூடாது என்றும் ஐநா சபையின் தலைமைச் செயலர் ஆண்டனியோ கட்டரஸ் வலியுறுத்தியுள்ளார்.


உலக அளவில் நிலக்கரியை அதிகமாகப் பயன்படுத்தும் நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் 2005 முதல் 2015 வரையிலான பத்து ஆண்டுகளில் நிலக்கரியை எரிபொருளாகப் பயன்படுத்தும் அனல் மின்நிலையங்களில் வெளியாகும் மாசுக்காற்றின் அளவு 180% அதிகரித்துள்ளது. அதனால், உலகில் அதிக மாசுக்காற்றை வெளியிடும் நான்காவது பெரிய நாடாக இந்தியா உருவாகியுள்ளது. பொருளாதார அடிப்படையில் பார்த்தாலும் நிலக்கரியை ஆதாரமாகக் கொண்ட மின் திட்டங்கள் லாபம் அளிப்பவையாக இல்லை. நிலக்கரி மின்சாரத்தைவிட புதுப்பிக்கவல்ல மின்சாரத்தின் விலை 14% குறைவாக இருப்பதால் அதற்குத்தான் தேவை அதிகமாக உள்ளது. இந்தப் போட்டியைச் சமாளிக்க முடியாததால் சர்வதேச அளவில் 2014-க்குப் பிறகு செயல்படுத்தப்படுவதாக இருந்த நிலக்கரியை எரிபொருளாகக் கொண்ட மின் திட்டங்களில் 84% திட்டங்கள் கைவிடப்பட்டுவிட்டன. இத்தகைய சூழலில் இந்தியா 500 நிலக்கரிச் சுரங்கங்களை அமைப்பதாக அறிவிப்பதும், ரூ.50,000 கோடியை அதில் முதலீடுசெய்ய முனைவதும் இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்கு எந்த வகையிலும் உதவாது.

இதற்கெல்லாம் மேலாக, இன்றைய சூழலில் இந்தியாவுக்குப் பொருளாதார வளர்ச்சியைவிட, மக்கள் நலனும் சுற்றுச்சூழல் பாதுகாப்பும்தான் மிகவும் முக்கியமாகும். பருவநிலை மாற்றத்தின் தீய விளைவுகள் நம்மைத் தாக்கத் தொடங்கிவிட்டன. வங்கக் கடலில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் வடகிழக்குப் பருவமழைக் காலங்களில்தான் புயல்கள் உருவாகும். ஆனால், கடந்த சில நாட்களில் பரபரப்பாகப் பேசப்பட்டுக்கொண்டிருக்கும் ‘உம்பன்’ புயல் வங்கக் கடலில் மே மாதத்தில் உருவாகியுள்ளது. சென்ற ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் வங்கக் கடலில் ‘ஃபானி’ புயல் உருவாகி ஒடிஷாவைத் தாக்கியதும் இங்கே நாம் நினைவுகூர வேண்டியதாகும். 150 ஆண்டுகளில் மூன்றாவது முறையாகவும், 43 ஆண்டுகளில் முதல் முறையாகவும், அதாவது சராசரியாக 50 ஆண்டுகளுக்கு ஒருமுறை வங்கக் கடலில் ஏற்படக்கூடிய கோடைக்காலப் புயல் இப்போது அடுத்தடுத்த ஆண்டுகளில் உருவாகியிருப்பது பருவநிலை மாற்றத்தின் தீய விளைவுகள் பூவுலகை அடுத்தடுத்துத் தாக்கத் தொடங்கிவிட்டன என்பதையே காட்டுகிறது. 

இந்த நேரத்தில் நமது கவனம் முழுவதும் இயற்கையையும் சுற்றுச்சூழலையும் காப்பதில்தான் இருக்க வேண்டும். ஆகையால், ஆபத்தை விலை கொடுத்து வாங்கும் நிலக்கரிக் கொள்கையை இந்திய அரசு கைவிட வேண்டும். அதற்கு மாற்றாக சூரிய ஒளி மற்றும் காற்றாலை மின் திட்டங்களை அதிக அளவில் செயல்படுத்தி சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், அதன் மூலமாக புவி வெப்பமாதலின் தீய விளைவுகளைக் கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.

click me!