"மாணவிகளின் மேலாடையை அகற்றுவதா? - இதுதான் கலாச்சாரம் பற்றி பேசும் லட்சணமா!!" - அன்புமணி ஆவேசம்

Asianet News Tamil  
Published : May 08, 2017, 01:09 PM ISTUpdated : Sep 19, 2018, 03:15 AM IST
"மாணவிகளின் மேலாடையை அகற்றுவதா? - இதுதான் கலாச்சாரம் பற்றி பேசும் லட்சணமா!!" - அன்புமணி ஆவேசம்

சுருக்கம்

anbumani condemns about neet checking

கலாச்சாரம் பேசும் ஆட்சி நடைபெறும் நாட்டில் மாணவிகள் துப்பட்டாக்களை அகற்றி விட்டுத் தான் நீட்  தேர்வு எழுத வேண்டுமா என்று கட்டாயப்படுத்தியிருப்பது வேதனைக்குரியது என டாக்டர் அன்புமணி கூறியுள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கலாச்சாரம் பேசும் ஆட்சி நடைபெறும் நாட்டில் மாணவிகள் துப்பட்டாக்களை அகற்றி விட்டுத் தான்  தேர்வு எழுத வேண்டும் என்று கட்டாயப்படுத்தியிருக்கிறார்கள். தமிழகத்தில் அனைத்து தேர்வு மையங்களிலும் மாணவர்கள் மற்றும் மாணவிகளின் இடுப்புப் பட்டைகளில் உலோகம் இருப்பதாகக் கூறி அவற்றை வலுக்கட்டாயமாக அகற்றியுள்ளனர். 



இதைவிடக் கொடுமையான நிகழ்வு கேரளத்தில் நடந்துள்ளது. குன்னிமங்கலம் என்ற இடத்தில் தனியார் பள்ளி ஒன்றில் தேர்வு எழுதுவதற்காக சென்ற மாணவிகளின் உள்ளாடைகளில் உலோகக் கொக்கிகள் இருந்ததாகக் கூறி அவற்றை அகற்றும்படி  அதிகாரிகள் கட்டாயப்படுத்தியுள்ளனர். 

பள்ளி வளாகத்தில் உள்ள கழிப்பறைக்கு சென்று மாற்றி வருவதாக மாணவிகள் கூறிய போது, அதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. அதன்பின் பெண் அதிகாரிகள் முன்னிலையிலேயே மாணவிகள் உள்ளாடைகளை அகற்றியுள்ளனர். தலையைக் கூட வாரி பின்னல் போடக்கூடாது என்று கூறி வாரிய தலைமுடியை அதிகாரிகள் அவிழ்த்து விட்டுள்ளனர்.

தேர்வுக்கூடங்களின் பொறுப்பு அதிகாரிகளாக ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் சி.பி.எஸ்.இ சார்பில்  ஒர் அதிகாரி அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அவ்வாறு வந்த பொறுப்பு அதிகாரிகள் அனைவருமே வட இந்தியாவைச் சேர்ந்தவர்கள். அவர்கள் தான் இரக்கமின்றி இத்தகைய மனித உரிமை மீறல்களை கட்டவிழ்த்து விட்டுள்ளனர். 

இத்தகைய கொடூரமான விதிமுறைகளை வகுப்பதற்கு பதிலான நவீன கண்காணிப்பு முறைகளை சி.பி.எஸ்.இ கடைபிடித்திருக்கலாம். ஒவ்வொரு 20 மாணவர்களுக்கும் ஒரு மேற்பார்வையாளர் நியமிக்கப்பட்டிருக்கிறார். அவரால் ஒரே நேரத்தில் அனைவரையும் கண்காணிக்க முடியும். 

ஆனால், அவ்வாறு செய்யாமல் மாணவ, மாணவிகளை குற்றவாளிகளை கையாள்வது போல் நடத்தியது மன்னிக்க முடியாத செயலாகும். தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் காட்டப்பட்டது போன்ற கெடுபிடிகளில் 10% கூட வடமாநிலங்களில் காட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகாரிகளின் இந்த அட்டகாசத்தால் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகள் அவமானத்தால் தலை குனிந்து, அழுதபடியே தேர்வுக் கூடத்திற்குள் நுழைந்ததை பார்க்க முடிந்தது. கடுமையான மன உளைச்சலால் பாதிக்கப்பட்ட பலரால் சரியாக தேர்வை எழுத முடியவில்லை.

தேர்வுகளை எழுதுவதற்கு முன் நல்ல மனநிலையில் இருக்க வேண்டும்; அதற்கேற்றவாறு செயல்களை அமைத்துக் கொள்ள வேண்டும் என்று பொதுத்தேர்வுகளுக்கு அறிவுரை வழங்கும் சி.பி.எஸ்.இ அதற்கு முற்றிலும் எதிரான வகையில் இப்படி ஒரு அணுகுமுறையை கடைபிடித்தது ஏன்? என்பதை தான் புரிந்து கொள்ள முடியவில்லை. 

முறைகேடுகளை தடுப்பதாகக் கூறிக் கொண்டு கலாச்சார மற்றும் மனித உரிமை மீறலில் ஈடுபடுவதை சி.பி.எஸ்.இ இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும். அடுத்த ஆண்டு முதல் மாணவர்களை கொடுமைப்படுத்தாத நவீன கண்காணிப்பு முறையை அறிமுகப்படுத்த வேண்டும்.

PREV
click me!

Recommended Stories

CM Vijay-ஐ சந்திக்கும் மாணவர்கள்? : எப்போது? ஏன்? சூப்பர் அறிவிப்பு இதோ!
TN Politics: அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் ராஜினாமா! தவெகவில் ஐக்கியம்! அடுத்து என்ன நடக்கும்? பெரும் ட்விஸ்ட்!