ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை வெளியான நிலையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது எடுத்த ஆடியோ பதிவு ஒன்று சமூக வலைதளத்தில் மீண்டும் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆறுமுகசாமி அறிக்கை சர்ச்சை
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓ.பன்னீர் செல்வம் தர்மயுத்தம் மேற்கொண்ட நிலையில், ஆறுமுகசாமி ஆணையம் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. சுமார் 5 ஆண்டுகளுக்கு பிறகு ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. 600 பக்கத்திற்கு மேல் உள்ள அந்த அறிக்கையில், 2012-ஆம் ஆண்டில் சசிகலா மீண்டும் ஜெயலலிதாவுடன் இணைந்ததில் இருந்தே அவருக்கும் ஜெயலலிதாவுக்கும் நல்ல நட்பு இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜெயலலிதா மரணத்தில் சசிகலா, கே.எஸ்.சிவகுமார், அப்போதைய சுகாதரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் குற்றம் செய்தவர்களாக முடிவு செய்யப்பட்டு, ஆறுமுகசாமி ஆணையம் விசாரணைக்கு பரிந்துரைப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா குரலில் வெளியான ஆடியோ
இந்தநிலையில், தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது ஏற்கனவே வெளியாகி இருந்த ஆடியோ மீண்டும் சமூக வலை தளத்தில் வைரலாகி வருகிறது. அதில், ஜெயலலிதாவிற்கு இருமல் அதிகமாக இருந்த போது சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் முற்படுகின்றனர். அப்போது ஜெயலலிதா குரல் மிகவும் சோர்ந்து போய் பேசுவது போல் உள்ளது.
இந்த ஆடியோவில் ஜெயலலிதா இருமியபடி பேசி உள்ளார். அவரிடம், அவரின் தனிப்பட்ட மருத்துவர் சிவக்குமார் பேசுவது பதிவாகி உள்ளதாக கூறப்படுகிறது.
நீங்களும் சரியில்லை டாக்டர்
இந்த ஆடியோ ஜெயலலிதா உயிர் இழப்பதற்கு சில நாட்களுக்கு முன் எடுக்கப்பட்டு இருக்கலாம் என்றும் தெரிகிறது. அந்த ஆடியோவில் எனக்கு கிர் கிர் என்று உள்ளே கேட்கிறது. மூச்சு விடும் போது நன்றாக உய்ய் உய்ய் என்று கேட்கிறது. நான் கூப்பிட்ட போது நீங்கள் வரவில்லையே என ஜெயலலிதா பேசிவது போல் உள்ளது. தொடர்ந்து ஒன்று கிடக்க ஒன்று சொல்லிக்கொண்டு இருக்கிறீர்கள், நீங்களும் சரியில்லை என்று ஜெயலலிதா சோர்ந்த குரலில் கூறுகிறார். இந்த ஆடியோ தற்போது மீண்டும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படியுங்கள்