
முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஜெயலலிதா உடல் நலம் தேறி குணமடைய பல்வேறு தரப்பினர் வாழ்த்து செய்தி அனுப்பியும், பிரார்த்தனையில் ஈடுபட்டும் வருகின்றனர்.
முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வந்தன. வதந்தி பரப்பியவர்கள் மீது அதிமுக ஐடி பிரிவு செயலாளர் கொடுத்த புகாரின் பேரில் இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 50-க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பியதாக கூறி கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும் என ஆம்னெஸ்டி இன்டர் நேஷனல் கூறியுள்ளது.
முதலமைச்சர் ஜெயலலிதா குறித்த துல்லியமான தகவல்களை சரியான நேரத்தில் அளிப்பதன் மூலமே வதந்திகளை நிறுத்த முடியும் என்றும் கருத்து சுதந்திரத்தை முடக்குவதன் மூலம் அதை செய்ய முடியாது எனவும் ஆம்னெஸ்டி கூறியுள்ளது.