”முதல்வர் சொன்னதெல்லாம் கண்துடைப்பு தான்.. இதில் நீதிமன்றம் தலையிட வேண்டும்” - டிடிவி தினகரன் எச்சரிக்கை

By Raghupati RFirst Published Jun 13, 2022, 10:45 AM IST
Highlights

MK Stalin : இனி நடக்காமல் பார்த்துக்கொள்ளப்படும் என்று முதல்வர் சொன்னதெல்லாம் வெறும் கண்துடைப்புதான் என்று மக்களை நினைக்க வைத்திருக்கிறது சமீபத்திய இந்த மரணம். 

விசாரணை கைதி மரணம்

சென்னை கொடுங்கையூரில் விசாரணைக்காக காவல்நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட  ராஜசேகர் என்பவர் உயிரிழந்தார்.  திருவள்ளூர் மாவட்டம் அலமாதியை சேர்ந்த ராஜசேகரை அழைத்து சென்று விசாரணை நடத்திய போது, மாலை 5 மணி அளவில் ராஜசேகருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக தகவல்கள்  தெரிவிக்கின்றன.  காவல்துறை விசாரணையின்போது ராஜசேகருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதாக கூறப்படுகிறது.

காவல் விசாரணையில் மரணம் என்ற பிரிவின் படி 176 சட்ட பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணையின் போது ராஜசேகருக்கு உடல்நிலை சரியில்லாமல் போயுள்ளது. ராஜசேகர் மரணம் தொடர்பாக நீதித்துறை நடுவர் விசாரிப்பார். ராஜசேகர் மீது ஏற்கனவே 27 குற்ற வழக்குகள் உள்ளன.ராஜசேகரிடம் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தப்படவில்லை. சந்தேகத்தின் பேரில் விசாரணை  நடத்துவது காவல்துறையினரின் கடமை என்று சென்னை கூடுதல் ஆணையர் அன்பு தெரிவித்துள்ளார். 

டிடிவி தினகரன்

கொடுங்கையூர் லாக்அப் மரணம் தொடர்பாக 5 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார் அமமுக  பொதுச்செயலாளர் டிடிவி  தினகரன். அவரது ட்விட்டர் பக்கத்தில், ‘சென்னை கொடுங்கையூரில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட ராஜசேகர் என்பவர் போலீஸ் காவலில் இருக்கும்போது தாக்கப்பட்டு மரணமடைந்தார் என்ற செய்தி மிகவும் கவலை அளிப்பதாக இருக்கிறது.  

சட்டம் ஒழுங்கு பற்றி முதலமைச்சர் அவ்வப்போது ஆய்வு நடத்துவதாக வரும் செய்திகள் வெற்று விளம்பரத்திற்காகத்தானோ என்று நினைக்க வைக்கிறது இது போன்ற தொடர் லாக் அப் மரணங்கள்.  இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும்போதெல்லாம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இனி நடக்காமல் பார்த்துக்கொள்ளப்படும் என்று முதல்வர் சொன்னதெல்லாம் வெறும் கண்துடைப்புதான் என்று மக்களை நினைக்க வைத்திருக்கிறது சமீபத்திய இந்த மரணம். 

லாக் அப் மரணம் 

இதை இறுதி எச்சரிக்கையாக எடுத்துக்கொண்டு, கொடுங்கையூர் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுத்து, தமிழகத்தில் இனியும் லாக் அப் மரணங்கள் நடக்காமல் இருப்பதை காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வர் உறுதி செய்யவேண்டும். இதற்குமேலும் இந்த அரசு இந்த விஷயத்தில் அலட்சியம் காட்டினால், நீதிமன்றமே நேரடியாகத் தலையிட்டு  லாக் அப் மரணங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்’ என்று பதிவிட்டுள்ளார். 

இதையும் படிங்க : Sonu Sood : நான்கு கை, நான்கு கால்களுடன் பிறந்த குழந்தை.. நடிகர் சோனு சூட் செய்த நெகிழ்ச்சி செயல்.!

இதையும் படிங்க : மொபைல் முழுக்க 150 பெண்களின் ஆபாச வீடியோக்கள்.. பாத்ரூமில் எடுத்த போது வசமாக சிக்கிய சாஃப்ட்வேர் என்ஜினீயர்

click me!