சின்னம் கிடைக்கட்டும்.. அப்புறம் பாரு ஆட்டத்தை... அமமுகவின் அதிரடி வியூகம்!

By Asianet TamilFirst Published Mar 29, 2019, 6:36 AM IST
Highlights

அமமுகவுக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்க உள்ள சின்னத்தை ஆர்.கே. நகர் பாணியில் வேகமாகப் பிரபலடுத்த அக்கட்சி தலைமை திட்டமிட்டுள்ளது.

கடந்த 2017 டிசம்பரில் ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் தினகரனுக்கு குக்கர் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட தினகரன், அமோக வெற்றி பெற்றார். இதனையத்து அவர் தொடங்கிய அமமுகவுக்கு குக்குர் சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்தை அணுகினார். ஆனால், தேர்தல் ஆணையம் மறுத்ததால், குக்கர் சின்னம் ஒதுக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

 
உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றபோது, ‘தேர்தல் ஆணையத்தில் கட்சியைப் பதிவு செய்யாததால் குக்கர் சின்னம் வழங்க முடியாது’ என்று தேர்தல் ஆணையம் கூறியது. இதை எற்றுக்கொண்ட நீதிமன்றம், ‘குக்கர் சின்னம் ஒதுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட முடியாது” என்று மறுத்துவிட்டது. அதே வேளையில்  ஏதாவது ஒரு பொது சின்னத்தை வழங்க பரிந்துரை செய்து தேர்தல் ஆணையத்துக்கு  நீதிமன்றம் உத்தரவிட்டது. 
இதுவரை அமமுக வேட்பாளர்கள் சின்னம் இல்லாமல் பெயரைச் சொல்லியே வாக்கு சேகரித்துவருகிறார்கள். மேலும் அக்கட்சி வேட்பாளர்கள் அனைவரும் சுயேச்சை வேட்பாளர்களாக மனு தாக்கல் செய்திருக்கிறார்கள். இன்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டவுடன் வேட்பாளர்களுக்கு சின்னங்களை தேர்தல் ஆணையம் ஒதுக்கும். எனவே தேர்தல் ஆணையம் இன்று வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கும்போது அமமுகவுக்கு எந்தச் சின்னம் என்பது தெரியவரும்.
தேர்தலுக்கு 20 நாட்களுக்கும் குறைவாக இருப்பதால், அந்தச் சின்னத்தை விரைவாக மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டிய நிலை அமமுகவுக்கு உள்ளது. ஏற்கனவே ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் குக்குர் சின்னத்தை பிரபலப்படுத்த சமூக ஊடகங்களை அக்கட்சியினர் பயன்படுத்தினார்கள். அதேபோல இம்முறையும் ஃபேஸ்புக். ட்விட்டர், வாட்ஸ் அப் மூலம் பிரபலப்படுத்த கட்சியின் தொழில்நுட்ப பிரிவுக்கு கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளது.


இதேபோல ஒதுக்கும் சின்னத்தின் மாதிரியை இரண்டு நாட்களுக்குள் தயார் செய்து, வாக்கு சேகரிப்பில் பயன்படுத்தும்படி வேட்பாளர்களை தினகரன் அறிவுறுத்தியுள்ளார்.  மேலும் வாக்கு சேகரிப்பில் ஈடுபடும் எல்லோருக்கும் கட்சியின் சின்னம் பொறித்த பதாதைகள், மாதிரிகள் ஆகியவற்றை வழங்கவும் தேர்தல் பொறுப்பாளர்களுக்கு கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அமமுகவின் சின்னத்தை பிரபலபடுத்த தயார் நிலையில் உள்ளனர் அக்கட்சியினர்.

click me!