
நாடாளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க அதிக இடங்களில் வென்று அடுத்த பிரதமரை தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுக்கும் என்று டி.டி.வி தினகரன் பேசியுள்ளார்.
தி.மு.க மற்றும் அ.தி.மு.கவை முந்திக் கொண்டு நாடாளுமன்ற தேர்தல் பணிகளில் தினகரன் தீவிரம் காட்டி வருகிறார். 25 இடங்களில் அ.ம.மு.க போட்டியிடும் என்றும் 15 தொகுதிகளில் கூட்டணி கட்சிகள் களம் இறங்கும் என்றும் வெளிப்படையாகவே அறிவித்துவிட்டார் தினகரன். தற்போது மாவட்டம் தோறும் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளை சந்தித்து நாடாளுமன்ற தேர்தல் வியூகம் வகுத்து வருகிறார் தினகரன்.
இதற்காக திருச்சி புறப்பட்ட தினகரன் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறேன். மக்கள் ஆர்ப்பரிப்புடன் என்னை வரவேற்கின்றனர். மாநகரம் முதல் கிராம ஊராட்சிகள் வரை எங்கள் கட்சிக்கு கிளை இருக்கிறது. மக்கள் தற்போதைய அரசு மீது பெரும் அதிருப்தியில் உள்ளனர்.
உடனடியாக ஆட்சி மாற்றத்தை கொண்டுவருமாறு என்னை வலியுறுத்துகின்றனர். 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வந்த உடன் தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி முடிந்துவிடும். நாடாளுமன்ற தேர்தலுக்கு தீவிரமாக அ.ம.மு.க தயாராகி வருகிறது. தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் தற்போதே தேர்தல் பணிகளை துவங்கிவிட்டனர்.
அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் மத்தியில் யார் ஆட்சி அமைப்பது என்பதை தீர்மானிக்கப்போவது தமிழக எம்.பிக்கள் தான். அதிலும் அ.ம.மு.க கணிசமான தொகுதிகளில் வெற்றி பெற்று தமிழகத்தில் அதிக எம்.பிக்களை கொண்ட கட்சியாக இருக்கும். மேலும் அடுத்த பிரதமர் யார் என்பதையும் அ.ம.மு.க தான் தீர்மானிக்கும். இவ்வாறு தினகரன் விமான நிலையத்தில் பேசினார். ஆனால் அவர் மோடிக்கு எதிராக எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.