சோதனை மேல் சோதனை... சின்னம் கிடைக்காமல் அமமுக வேட்பாளர்கள் அதிருப்தி..!

By Asianet TamilFirst Published Mar 28, 2019, 9:08 AM IST
Highlights

தினகரனின் அமமுகவுக்கு தேர்தல் ஆணையம் இன்னும் சின்னத்தை ஒதுக்காததால் அக்கட்சி வேட்பாளர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 39 தொகுதிகளிலும் இடைத்தேர்தலில் 18 தொகுதிகளிலும் அமமுக போட்டியிடுகிறது. ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு தினகரன் வெற்றி பெற்றதால், அதே சின்னத்தை பொதுச் சின்னமாக கேட்டுவந்தார். ஆனால். அந்தச் சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், தினகரன் கட்சிக்கு பொதுச் சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் வேட்புமனுக்கள் தாக்கல் செய்வது முடிந்து, எல்லா கட்சி வேட்பாளர்களும் பிரசாரத்தில் கவனம் செலுத்திவருகிறார்கள். அமமுக துணைப் பொதுச்செயலாளர் தினகரனும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ஆனால், அக்கட்சி வேட்பாளர்கள் சின்னம் தெரியாததால், தேர்தல் பிரசாரம் செய்வதில் சுணக்கமாக உள்ளனர்.
கட்சியின் வேட்பாளர் பெயரைச் சொல்லி வாக்கு சேகரிப்பதைவிட சின்னத்தின் பெயரைச் சொல்லி வாக்குக் கேட்பது எளிது என்பதால், அமமுக வேட்பாளர்கள் அதிருப்தியில் உள்ளனர். வேட்புமனுத்தாக்கல் திரும்ப பெற்ற பிறகு போட்டியிடும் வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கப்படும் என்பதால், பொதுவெளியில் பிரசாரம் மேற்கொள்ளாமல், ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள முக்கியஸ்தர்களைச் சந்தித்து அமமுகவினர் ஆதரவு திரட்டிவருகிறார்கள்.


மதுரையில் வேட்புமனுத் தாக்கல் செய்த அமமுக வேட்பாளர் டேவிட் அண்ணாதுரை, சின்னம் ஒதுக்காததால் கடந்த 2 நாட்களாகப் பிரசாரத்தில் ஈடுபடவில்லை என்று கூறப்படுகிறது. அதே வேளையில் மற்ற கட்சி வேட்பாளர்கள் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுவருகிறார்கள். தொடக்கம் முதலே சோதனையாக இருப்பதால் அமமுக வேட்பாளர்கள் சற்று கலக்கத்தில் உள்ளனர்.
இதற்கிடையே சின்னம் ஒதுக்கும் வரை தங்கள் பெயரைச் சொல்லியும் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் தினகரன் பெயரைச் சொல்லியும் வாக்கு கேட்க அமமுகவினர் முடிவு செய்திருக்கிறார்கள் என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இந்நிலையில் தினகரன் கட்சிக்கு என்ன சின்னம் ஒதுக்குவது என்பதில் தேர்தல் அதிகாரிகள் குழப்பத்தில் உள்ளதாகக் கூறப்படுகிறது. டெல்லி தலைமை தேர்தல் ஆணையத்திலிருந்து இன்னும் அதிகாரப்பூர்வமாக எந்தத் தகவலும் மாநில தேர்தல் அதிகாரிக்கு வராததால், டெல்லியிலிருந்து வரும் தகவலுக்காகக் காத்திருப்பதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

click me!