
தற்காலிக அரசியலில் எழுச்சி நாயகனாக கொண்டாடப்படும் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனின் செயல்பாடுகளால் அக்கட்சி வேட்பாளர்கள் அதிருப்தியாகித் தவிக்கின்றனர்.
கடந்த 18ம் தேதி 38 தொகுதிகளுக்கு மக்களவை தேர்தலும் , 18 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தலும் நடைபெற்றது. இந்த 18 தொகுதிகளிலும் அமமுக வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். திமுக, அதிமுக கட்சி வேட்பாளர்களுக்கு இணையாக செலவு செய்து தங்களது பலத்தை நிரூபிக்க வேண்டும் என்று அமமுக தலைமை திட்டமிட்டிருந்தது. ஆனால், அமமுக சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளர்கள் தங்களிடம் செலவு செய்ய போதிய பணம் இல்லை. தலைமை பணம் தந்தால் மட்டுமே அதிமுகவிற்கு இணையாக தேர்தலில் செலவு செய்ய முடியும் என கறாராக தெரிவித்து விட்டனர்.
வேறு வழியின்றி தலைமையின் உத்தரவின் பேரில் வேட்பாளர்களுக்கு வரும் செலவில் பாதி பணத்தை கட்சியும், மீதமுள்ள
பணத்தை வேட்பாளர்களும் செலவு செய்யும்படி அறிவுத்தப்பட்டது. தேர்தல் முடிந்த பின்பு வேட்பாளர்கள் செலவு செய்த பணத்தை
கட்சி தலைமை தருவதாக உறுதியளித்தது. இதை நம்பி வேட்பாளர்களும் தங்களின் கைகளில் இருந்த பணத்தையும், கடனுக்கு
வாங்கியும் செலவு செய்துள்ளனர்.
ஆனால், அக்கட்சியின் தலைமையோ வாக்கு வங்கி உள்ள தொகுதிகளில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு மட்டுமே தேர்தல் செலவுக்கு பணம் கொடுத்ததாகவும் மீதம் இருக்க கூடிய தொகுதிகளின் வேட்பாளர்களுக்கு உத்தரவாதம் அளித்தபடி வேட்பாளர்களுக்கு பணத்தை திரும்ப கொடுக்காததால் அவர்கள் கடும் அதிருப்தியை அடைந்துள்ளதாக கூறுகிறார்கள். இதுகுறித்து தலைமையிடம் கேட்டு எந்த பதிலும் இல்லாததால் என்ன செய்வதென்று தெரியாமல் வேட்பாளர்கள் புலம்பி வருகிறார்களாம்.