வாகனங்களில் கட்சிக் கொடி கட்டிக்கொள்ள இடமில்லை... போக்குவரத்து துறை அதிரடி..!

By Thiraviaraj RMFirst Published Apr 23, 2019, 2:43 PM IST
Highlights

அரசியல்வாதிகளின் வாகனங்களில் கட்சிக் கொடி கட்டிக் கொள்ள வாகனச் சட்டத்தில் இடமில்லை என போக்குவரத்து துறை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
 

அரசியல்வாதிகளின் வாகனங்களில் கட்சிக் கொடி கட்டிக் கொள்ள வாகனச் சட்டத்தில் இடமில்லை என போக்குவரத்து துறை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

சாலைகளை முறையாக பயன்படுத்துவது தொடர்பாக வழக்கறிஞர் ஸ்டாலின் உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இது தொடர்பான விசாரணை நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், வாகனங்களில் கட்சிக்கொடிகளை கட்ட தடை விதித்தாலே 50 சதவிகித குற்றச்செயல்கள் குறைந்துவிடும். இது தொடர்பாக போக்குவரத்து துறை விளக்கமளித்து பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். 

இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் சுந்தர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது போக்குவரத்து துறை தாக்கல் செய்த பதில் மனுவில், ’’அரசியல்வாதிகளின் வாகனங்களில் கட்சிக் கொடி கட்டிக் கொள்ள வாகனச் சட்டப்படி இடமில்லை.  வாகனங்களில் பெரிதாக தங்களது பதவி பெயர்களை பதிவு செய்யவும் இடமில்லை எனத் தெரிவித்தனர். இந்நிலையில் இந்த வழக்கை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

உலகிலேயே வாகனங்களில் கட்சிக் கொடியை கட்டிக் கொண்டு போவதை தமிழகத்தில் தான் அதிகமானோர் கடைபிடித்து வருகின்றனர். அதேபோல் கட்சிக்கரை வேட்டி, ஆடைகளில் கட்சி அடையாளங்கள், பேனாவில் தலைவர்கள் படம், அணியும் ஆபரணங்களில் கட்சி சிம்பள் என தத்தம் கட்சியினர் அணிந்து கொண்டு அலப்பறையைக் கூட்டுவதில் உலகில் தமிழர்களை அடித்துக் கொள்ள ஆளே கிடையாது. 

கட்சி நிர்வாகிகள் செல்லும் இன்னோவா, சுமோ கார்களில் கட்சிக்கொடி கட்டிச் செல்வதைக் கூட சகித்துக் கொள்ளலாம். சைக்கிள், ஸ்கூட்டர், பைக், மாருதி 800 வரையிலான வாகனங்களில் தங்களது கட்சி அடையாளங்களை பளிச்சென படம்போட்டு, கட்சி கொடியை வரைந்து ஆளாளுக்கு அரசியல் ஆர்வத்தை காட்டும் அடாவடிக்கு பெயர்போனது தமிழகம். இந்த விவாகரத்தில் வாகனங்களில் கட்சி கொடி கட்டிக் கொள்ள தடை விதித்தால் இந்த அடாவடிகள் குறையும் என கூறப்படுகிறது. 

click me!