
சில இடங்களில் அம்மா உணவகங்கள் சரியாக செயல்படவில்லை என்றும், அது குறித்து தமிழக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன் என்றும் தான் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்துள்ளார். மாநகராட்சியில் உள்ள மயானங்கள் அனைத்தும் முறையாக செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். திமுக ஆட்சிக்கு வந்தது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. உள்ளாட்சி மன்றத் தேர்தல் நடத்தப்பட்டு அதற்கான மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதனால் உள்ளாட்சி பணிகள் துரிதகதியில் நடந்து வருகிறது. இந்நிலையில் சென்னை மாநகராட்சி மேயராக தலித் பெண் மேயர் பிரியா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அவர் குடிநீர் சாலை உள்ளிட்ட அடிப்படை பணிகளை செய்து தருவதே தனது முக்கிய இலக்கு என தெரிவித்துள்ளார். இந்நிலையில் சென்னை மாநகராட்சி மண்டலம் 10 குட்பட்ட 124 வது வார்டு முதல் 142 வது வார்டு வரையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து பிரியா இன்று ஆய்வு நடத்தினார். அதைத் தொடர்ந்து சென்னை கோடம்பாக்கம் தனியார் மண்டபத்தில் பிரியா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், துணை மேயர் மகேஷ்குமார் ஆணையர் ககன்தீப்சிங் பேடி மாநகராட்சி கவுன்சிலர்கள், மாநகராட்சி அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் திட்டப்பணிகள் குறித்து ஆய்வுக்கு செல்லும்போது மாநகராட்சி அதிகாரிகளை அழைத்துச் செல்லவேண்டும், மாநகராட்சியில் உள்ள மயானங்கள் அனைத்தும் முறையாக பராமரிக்கப்பட வேண்டும், அதேபோல் அம்மா உணவகங்களில் உணவுகள் தரமான முறையில் வழங்கப்பட வேண்டுமென மேயர் பிரியா அறிவுரை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், சென்னை மாநகராட்சியில் பல இடங்களில் அம்மா உணவகங்கள் முறையாக செயல்படாமல் இருக்கின்றன, அதுகுறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்றும் அவர் கூறினார். அவரையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய துணை மேயர் மகேஷ்குமார் அம்மா உணவகம் கடந்த ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட திட்டம் என்றாலும், மக்கள் பயன்பெறுவார்கள் என்ற அடிப்படையில் அது தொடர்ந்து இயக்கப்பட்டு வருகிறது என்றார். சென்னையில் அம்மா உணவகம் ஒன்றுக்கு மாதந்தோறும் 1 லட்சம் ரூபாய் நஷ்டத்தில் இயங்குவதாகவும் அவர் கூறினார்.