"பாஜக தலைவர்கள் பொறுப்பில்லாமல் பேசியதால்தான் டெல்லி தேர்தலில் தோற்றோம்": தோல்வியை ஒப்புக்கொண்ட அமித் ஷா

By Asianet TamilFirst Published Feb 14, 2020, 5:01 PM IST
Highlights

மதத்தின் அடிப்படையில் யாரையும் நாங்கள் ஒருபோதும் பாகுபாடு பார்க்கமாட்டோம். முஸ்லிம்களின் குடியுரிமை பறிக்கப்படும் என குடியுரிமைத் திருத்தச்சட்டத்தி்ல எந்த அம்சமும் இல்லை.

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக படுதோல்வியைச்சந்தித்தது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நேற்று நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றபோது வெளிப்படையாகக் குறிப்பிட்டார். அவர் கூறியதாவது:

தேர்தலில் பாஜக வெற்றி தோல்விக்காக போட்டியிடவில்லை. ஆனால், தன்னுடைய சிந்தாந்தங்களை, கொள்கைகளை மக்களிடம் தேர்தல் மூலம் பரப்புவதை நம்புகிறது.டெல்லி தேர்தலில் பாஜகவின் சில தலைவர்கள் மக்கள் மத்தியில் பேசும்போது, சுட்டுத்தள்ளுங்கள், இந்தியா-பாக் போட்டி எனப் பேசியிருக்கக்கூடாது. இதுபோன்ற கருத்துக்களைப் பேசி இருக்கக் கூடாது. சர்ச்சையான இந்த கருத்துக்களில் இருந்து பாஜக ஒதுங்கி இருந்திருக்க வேண்டும்.

இதுபோன்ற சர்ச்சைக்குரிய கருத்துக்களைப் பாஜக தலைவர்கள் பேசியதால்தான் தேர்தலில் நாம் மிகப்பெரிய விலை கொடுக்க நேரிட்டுள்ளது. தோல்விக்குக் காரணமாகவும் அமைந்தது. இதுபோன்ற பேச்சுக்களால்தான் நம்முடைய ஒட்டுமொத்த உழைப்பும் வீணாகிறது.டெல்லி தேர்தல் குறித்த எனது கணிப்புகள் தவறாக அமைந்துவிட்டது. ஆனால், குடியுரிமைத் திருத்தச்சட்டம், தேசிய குடியுரிமைப் பதிவேட்டுக்கு எதிராக மக்கள் அளித்த தீர்ப்பாக தேர்தல் முடிவுகளை எடுக்க முடியாது.

குடியுரிமைத் திருத்தச்சட்டம் குறித்து யாரேனும் என்னுடன் விவாதிக்க தயார் என்றால், என் அலுவலகத்தில் நேரம் குறித்துக் கொள்ளுங்கள். நான் 3 நாட்கள் தருகிறேன்.வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம்அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்கவே சிஏஏ-யில் நடைமுறை இருக்கிறதே தவிர, யாருடைய குடியுரிமையையும் பறிக்க இடமில்லை.

மதத்தின் அடிப்படையில் யாரையும் நாங்கள் ஒருபோதும் பாகுபாடு பார்க்கமாட்டோம். முஸ்லிம்களின் குடியுரிமை பறிக்கப்படும் என குடியுரிமைத் திருத்தச்சட்டத்தி்ல எந்த அம்சமும் இல்லை.மேலோட்டமாக சிஏஏ திருத்தச்சட்டத்தை விமர்சிக்காதீர்கள், அதில் உள்ள நல்ல விஷயங்களை பேசுங்கள். முஸ்லிம்களுக்கு எதிரானதும், சிறுபான்மையினருக்கும் எதிரானதும் சிஏஏ அல்ல. சிஏஏ-வின் நல்ல அம்சங்கள் குறித்து யாருடனும் நான் விவாதிக்கத் தயாராக இருக்கிறேன். ஆனால், துரதிர்ஷ்டம் யாரும் என்னுடன் சிஏஏ குறித்து விவாதிக்க முன்வருவதில்லை.இவ்வாறு அமித் ஷா தெரிவித்தார்

click me!