பா.ஜ.க. தேசிய தலைவராக 4-வது ஆண்டில் அமித் ஷா…

First Published Aug 9, 2017, 9:28 PM IST
Highlights
Amith sha in BJP fourth year


பா.ஜ.க. தேசிய தலைவராக 4-வது ஆண்டில் அமித் ஷா…

பாரதிய ஜனதா கட்சிக்கு நாடு முழுவதும் பல வெற்றிகளை தேடித்தந்த அமித் ஷா, அக்கட்சியின் தேசிய தலைவர் பதவியில் 3 ஆண்டுகளை நிறைவு செய்து, 4-வது ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ளார்.

குஜராத்தை சேர்ந்து 52 வயதான அமித் ஷாவின் அரசியல் தந்திரங்கள், குறிப்பாக அடித்தட்டு மட்டத்தில் அவர் மேற்கொண்ட உத்திகள் அக்கட்சிக்கு தொடர்ந்து வெற்றிகளை தந்து வருவதாக அரசியல் வல்லுனர்கள் கருதுகின்றனர்.

2014 ஜூலை மாதம் அமித் ஷா பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே வருடம் ஆகஸ்டு 9-ம் தேதி பா.ஜ.க. தேசிய கவுன்சில் அவரை கட்சித் தலைவராக அங்கீகரித்தது. பிரதமராக நரேந்திர மோடி தேர்வானதை தொடர்ந்து அமித் ஷாவுக்கு இந்த தலைவர் வாய்ப்பு கிட்டியது.

மோடியும் அமித் ஷாவும் அரசியலில் இரட்டையர்களாகவே கருதப்படுகின்றனர். மோடியின் கவர்ச்சி பேச்சுக்களும், அமித் ஷாவின் அடித்தட்டு கட்சி செயல்பாடுகளும் பாரதிய ஜனதா கட்சிக்கு தொடர் வெற்றிகளை தந்து கொண்டிருக்கிறது.

இந்த இரட்டையர்களின் வெற்றிப் பயணம் டெல்லி, பீகார், பஞ்சாப், புதுச்சேரி தேர்தலில் மட்டுமே தோல்வியை சந்திக்க நேர்ந்தது.

அமித் ஷாவின் அரசியல் உத்தி அக்கட்சியை 13 மாநிலங்களில் ஆட்சி புரிய வழிகோலியுள்ளது. மேலும் 5 மாநிலங்களில் கூட்டணி் ஆட்சியை அக்கட்சி நடத்துகிறது.

காஷ்மீர் மாநிலத்தை கூட அமித் ஷா விட்டு வைக்கவில்லை. அங்கும் மெகபூபாவுடன் கூட்டுச் சேர்ந்து பா,ஜ.க. கூட்டணி ஆட்சியை நிறுவியுள்ளார்.

உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் என வரிசையாக வெற்றிகளைப் பெற்றுவருகிறது அமித் ஷாவின் பாரதிய ஜனதா.

அசாமிலும், அரியானாவிலும் முதல் முறையாக பாரதிய ஜனதா ஆட்சி அமைய அமித் ஷாவின் அரசியல் திறமையே பயன்பட்டுள்ளதாக அக்கட்சியினரே கருதுகின்றனர்.

அது மட்டுமன்றி தேர்தலில் பெரும்பான்மை பலம் பெறாத நிலையிலும் கோவா மற்றும் மணிப்பூரில், தனது அரசியல் திருவிளையாடல் மூலம் ஆட்சி அமைத்துக் காட்டினார் அமித் ஷா.

அருணாச்சல பிரதேசத்தில் அருணாச்சல பிரதேச மக்கள் கட்சியில் இருந்து 33 எம்.எல்.ஏ.க்களை கட்சி தாவல் செய்யவைத்து பா.ஜ.க. ஆட்சியை நிறுவினார் அமித் ஷா.

அமித் ஷா நாடு முழுவதும் உள்ள கட்சித் தொண்டர்களுடன் நேரடியாக பேசி கட்சிப்பணிகளை கவனித்து வருவதும், பூத் கமிட்டிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதும் வெற்றிக்கு முக்கிய காரணம் எனக் கருதப்படுகிறது.

மேலும் ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் துணை அமைப்புகளை (சங்கப் பரிவாரங்களை) தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபடச்செய்து வருவதும் அமித் ஷாவின் வெற்றிக்கு காரணம் எனக் கருதப்படுகிறது.

பா.ஜ.க. ஆட்சி புரியாத மாநிலமே இல்லை, பஞ்சாயத்தே இல்லை என்ற நிலையை உருவாக்குவேன் என்று பகிரங்கமாக அறிவித்து களமிறங்கி செயல்பட்டு வரும் அமித் ஷா, தற்போது 2019 நாடாளுமன்ற தேர்தல் தயாரிப்புக்காக நாடு முழுவதும் 110 நாள் தீவிர சுற்றுப்பயணத்தில் இறங்கியுள்ளார்.

சராசரியாக அவர் தினமும் 541 கிலோ மீட்டர் தொலைவு பயணம் செய்து கட்சியை 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு தயார் படுத்தி வருகிறார்.

அவரது அரசியல் தந்திரங்களை நாடு முழுவதும் உள்ள கட்சி தொண்டர்கள் மற்றும் இந்துத்துவா பரிவாரங்கள் மத்தியில் போதித்து வருகிறார்.

பாரதிய ஜனதா கட்சியின் வெற்றிக்கு சாமியார்களையும் அவர் பயன்படுத்த தவறவில்லை.

ஆனால் அமித் ஷாவின் தேர்தல் உத்தி, முதல் முறையாக அவரது சொந்த மாநிலமான குஜராத்தில் நடைபெற்ற மாநிலங்களவை தேர்தலில் தோல்வியை சந்தித்துள்ளது. அவரது அரசியல் அதிசய செயல்பாடுகளையும் மீறி காங்கிரஸ் கட்சியின் அகமது படேல் வெற்றிபெற்று மாநிலங்களவை உறுப்பினராக தேர்வாகி உள்ளார்.

பாரதிய ஜனதாவின் தேசிய தலைவராக, இந்துத்துவ தேசியத்தை உருவாக்க முயலும் அமித் ஷாவின் பயணம் 3 வருடத்தை நிறைவு செய்து, 4-வது வருடத்தில் காலடி எடுத்து வைத்துள்ளது.

 

click me!