மோடிக்கு அடுத்த இடத்துக்கு முன்னேறுகிறார் அமித் ஷா..? உள் துறை அமைச்சராக பொறுப்பேற்தாக தகவல்!

By Asianet TamilFirst Published May 28, 2019, 7:06 AM IST
Highlights

மோடி முதன்முறை பிரதமராக இருந்தபோது இரண்டாவது இடத்தில் இருந்த ராஜ்நாத் சிங் உள்துறையைக் கவனித்தார். இப்போது அமித் ஷா பொறுப்பேற்றால், அமைச்சரவையில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
 

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் அமித் ஷாவுக்கு உள் துறை அமைச்சர் பதவி வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
   நாளை மறுதினம் இரண்டாவது முறையாக மோடி பிரதமராகப் பதவியேற்கிறார். அவருடன் புதிய அமைச்சர்களும் பதவியேற்க உள்ளனர். கடந்த முறை மோடி அமைச்சரவையில் பங்கேற்காத பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவுக்கு இந்த முறை அமைச்சர் பதவி வழங்க மோடி விரும்புவதாகக் கூறப்படுகிறது. எனவே அமித் ஷா இந்த முறை அமைச்சராக பதவியேற்பார் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவருக்கு உள்துறை ஒதுக்கப்படும் என்றும் தகவல்கள் உலா வருகின்றன.


கடந்த முறை பாஜக வெற்றி பெற்றபோது பாஜக தலைவராக இருந்த ராஜ்நாத் சிங் விரும்பியபடி உள்துறையை மோடி ஒதுக்கினார். இப்போது தலைவராக உள்ள அமித் ஷாவுக்கு உள்துறையை ஒதுக்க மோடி ஆர்வம் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. பாஜகவில் ஒருவருக்கு ஒரு பதவி என்ற நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி அமித் ஷா மத்திய அமைச்சராகிவிட்டால், அவர் தலைவர் பதவியிலிருந்து விலக நேரிடும். அவருக்குப் பதில் பூபேந்திர யாதவ் நியமிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.


 குஜராத் முதல்வராக மோடி இருந்தபோது அவருடைய அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இருந்தவர் அமித் ஷா. தற்போது மோடி அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக அமித் ஷா பொறுப்பேற்றால், மாநிலத்திலும் மத்தியிலும் மோடி தலைமையில் உள்துறை அமைச்சராக இருந்தவர் என்ற சிறப்பு அவருக்குக் கிடைக்கும். மத்தியில் பாஜக அமைச்சரவையில் இரண்டாவது இடம் வகிப்பவர்களே உள் துறையைக் கவனித்திருக்கிறார்கள். வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது அத்வானி உள்துறை அமைச்சராக இருந்தார். மோடி முதன்முறை பிரதமராக இருந்தபோது இரண்டாவது இடத்தில் இருந்த ராஜ்நாத் சிங் உள்துறையைக் கவனித்தார். இப்போது அமித் ஷா பொறுப்பேற்றால், அமைச்சரவையில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

click me!