வைகைப்புயல் வடிவேலோடு மோதும் தமிழக அமைச்சர்கள்: ஏய் வாடா வாடா! உன் காமெடிக்கும் எங்க காமெடிக்கும் சோடி போட்டுக்கலாமா சோடி!

By Vishnu PriyaFirst Published Sep 20, 2019, 4:44 PM IST
Highlights

தமிழக அமைச்சரவையில் ’காமெடி கலாட்டா  துறை’ என்ற ஒன்றை உருவாக்கி, அதன் உயரிய உறுப்பினர்களாக ஆறு அமைச்சர்களை சப்தமில்லாமல் போட்டிருக்கிறார்கள்

சீரியஸ் இயக்குநர் பாலா படம் போல் ஜெயலலிதாவின் அமைச்சரவை எப்போதுமே அழுகாச்சி மோடிலேயே இருக்கும். அவ்வப்போது சில ஆக்‌ஷன் அதிரடிகள் நடப்பதோடு சரி. ஆனால் எடப்பாடியாரின்  அமைச்சரவையோ கே.எஸ்.ரவிக்குமார் படம் போல் ச்சும்மா தாறுமாறு காமெடி, தடாலடி ஆக்‌ஷன், கண்கள் வலிக்கும் சென்டிமெண்ட் என்று கன்னாபின்னான்னு ஓடுவதுதான் ஹைலைட்டு. 

இந்த ஆட்சியில் தமிழக மக்கள் மகிழ்ச்சியாக இல்லை! இல்லை! இல்லவேயில்லை! என்று தி.மு.க. தாறுமாறாக திட்டுகிறது. ஆனால் இதை மக்களே ஏற்றுக் கொள்ளவில்லை. காரணம், இந்த அரசாங்கத்தால் மக்களுக்கு எந்த நல்ல திட்டங்களைத் தர முடிகிறதோ இல்லையோ, எந்த சலுகைகளைத் தர முடிகிறதோ இல்லையோ ஆனால் பொழுது போய் பொழுது விடிந்தால் வயிறு வலிக்க சிரிக்கும் காமெடிகளை மட்டும் கனகச்சிதமாக அவுத்து விட்டுக் கொண்டிருக்கிறார்கள். 


தமிழக அமைச்சரவையில் ’காமெடி கலாட்டா  துறை’ என்ற ஒன்றை உருவாக்கி, அதன் உயரிய உறுப்பினர்களாக ஆறு அமைச்சர்களை சப்தமில்லாமல் போட்டிருக்கிறார்கள். அவர்கள் ராஜேந்திரபாலாஜி, செல்லூர் ராஜு, திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி.உதயக்குமார், ஜெயக்குமார் மற்றும் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர்தான். 
இவர்கள் ஆறு பேரும் வாயை திறந்தாலே ஆறேழு நாட்களுக்கு மக்களால் சிரிப்பை அடக்க முடிவதில்லை. இவர்கள் எவ்வளவு சீரியஸாக பேட்டிக் கொடுத்தாலும் கூட அதை செம்ம காமெடியாகவேதான் எடுத்துக் கொள்கிறார்கள் மக்கள். 

மக்களின் மன துயரம் போக காமெடி கச்சேரி நடத்தும் நமது ஆறு அண்ணன்களின் ஆல்டைம் அதிரிபுதிரி காமெடிகளின் மாஸ்டர்பீஸாக சிலவற்றைப் பார்ப்போமா?....
*    மது குடிக்கலேன்னா மது பிரியர்களுக்கு கைகால் நடுக்கம் வந்துடும். சிலருக்கு காலையிலேயே மது குடிச்சாகணும். டாஸ்மாக் கடைகளை இழுத்து மூடிட்டா  கள்ளச்சாராயம் காய்ச்ச துவங்கிடுவாங்க!
*    தி.மு.க.காரங்கள்ளாம் இப்பதான் ரவுடிங்க. ஆனா நாங்கல்லாம் பிறவியிலேயே ரவுடி!
    -    இதெல்லாம் அண்ணன் ராஜேந்திர பாலாஜியின் வேத வசனங்கள். 
*    தமிழக காடுகளில் புலி, யானை, சிங்கங்களெல்லாம் நலமாய் வாழ்கின்றன.
(தென் இந்திய வனங்களில் சிங்கமே இல்லாத நிலையில், நம்ம வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் டயலாக்கை பார்த்தீங்களா!) 
*    ஃபாரீனுக்கெல்லாம் ஃபிளைட் ஏறி போயிட்டு வர்றது எவ்வளவு கஷ்டமுன்னு தெரியுமா?
*    கர்நாடக சங்கீதத்தின் வாய்ப்பாட்டு கலைஞரான சுதா ரகுநாதனைப் பார்த்து...’எம்மா நீங்க பரதநாட்டிய கலைஞர்தானே?’ (கேட்டது நம்ம சீனிவாசனேதான்.)
*    அப்பல்லோவில் அம்ம இட்லி சாப்பிட்டாங்க, சட்னி சாப்பிட்டாங்கன்னு நாங்க பொய் சொன்னோம். 
...என்று திண்டுக்கல்லாரின் திகுதிகு டயலாக்குகள் தொடர்கின்றன. 
அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரோ....
*    நமது முதல்வர்  எடப்பாடியார் எட்டாவது அதிசயம். 
(இப்படி முதல்வரை புகந்த உதயகுமாரை, தினகரன் ‘இவரு ஒன்பதாவது அதிசயம்’ என்று சீண்டியதும்...)
*    ஆமாங்க ஆமா நான் ஒன்பதாவது அதிசயம்தான். வஞ்சகப்புகழ்ச்சியாக இதை  யாரும் சொன்னாலும் பரவாயில்லை. அதை ஏத்துக்கிறேன். நான் ஒன்பதாவது அதிசயம்தான். 
-    என்று தெறிக்க விடுகிறார் . 

செல்லூராரின் வசனங்களை எத்தனை முறை கேட்டாலும் சிரிப்பை அடக்க முடிவதில்லை. இப்போதெல்லாம் அவர் புதிதாய் காமெடிகளை உருவாக்குவதை விட, தனது பழைய காமெடிகளை ’அறிவியல்பூர்வமானவை’ என்று நிரூபிப்பதில்தான் அதிக ஆர்வம் காட்டுகிறார். 
இதற்காக அவர் சொல்லும் விஷயங்களோ பழைய காமெடியை விட பேய்த்தனமாக தெறிக்க விடுகின்றன சிரிப்பில். 

அந்த வகையில் ’என்னுடைய தெர்மகோல் திட்டத்தை சிலர் பாராட்டியுள்ளனர். இதை உலக அளவில் நீர் ஆவியாதலை தடுக்கும் முன்மாதிரி திட்டம்ன்னு சொல்லி பாராட்டுறாங்க.’ என்று சொன்னபோது பின்னாடி நின்றவர்களுக்கு சிரிப்பு பீறிட்டுக் கொண்டு வந்தது. ஆனால் அடக்கிக் கொண்டார்கள். 
அடுத்து அமைச்சர் ஜெயக்குமாரை பற்றிக் கேட்கவே வேண்டாம். அமைச்சர் பதவி முடிந்ததும் ‘அரசியலுக்கு உதவும் பழமொழிகள்’ என்று புத்தகமே போடுமளவுக்கு பழமொழிகளாய் போட்டு சாத்துகிறார் தன் பேட்டியில். தான் சொல்லக்கூடிய கான்செப்டுக்கு ஒத்து வருதோ இல்லையோ ஆனால் தான் தெரிஞ்சு வைத்திருக்கும் பழமொழிகளைப் போட்டுத் தாளிக்கிறார். 


அ.ம.மு.க.வின் வெற்றிவேல் இவருக்கு எதிராக கிளப்பிய பெண் ஆடியோ விவகாரத்துக்கு இன்னும் உறுதியான பதிலை சொல்லவில்லை அமைச்சர். ஆனால் ’எங்களை குறை கூறும் முன் உங்கள் முதுகிலிருக்கும் அழுக்கை கவனியுங்கள்.’ என்று தி.மு.க.வுக்கு வகுப்பெடுக்கிறார். 
இவர்களின் காமெடிகளெல்லாம் கூட காற்றில் கலக்கும் வார்த்தைகள்தான். மக்களை பெரிதாய் பாதிக்காது. ஆனால் நாளைய இந்தியாவை தாங்கக்கூடிய பள்ளிக் குழந்தைகளுக்கான துறையை கையில் வைத்திருக்கும், பள்ளிக் கல்வித் துறையின் அமைச்சரான கே.ஏ.செங்கோட்டையன் செய்யும் சீரியஸ் காமெடிகள்தான் பதற வைக்கின்றன. 

ஜெயலலிதா மரணத்துக்குப் பின் அமைச்சரான இவர் அன்றிலிருந்து கொடுத்த பில்ட் அப்கள் எல்லாம் நடைமுறைக்கு வந்திருந்தால் இந்நேரம் தமிழக அரசு பள்ளிகள் அத்தனையும் கட்டமைப்பில் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களையும், கல்வி தரத்தில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கும் நிகராக இருந்திருக்கும். ஆனால் ஏதாச்சும் ஒரு மாற்றம், முன்னேற்றம் நடந்திருக்கிறதா என்றால் இல்லவே இல்லை. 

கழிப்பறை இல்லாமல் குழந்தைகளும், நாஃப்கினை பெற மற்றும் அப்புறப்படுத்த வழியின்றி வயதுக்கு வந்த மாணவிகளும், குடிநீர் கூட இல்லாமல் மாணவ செல்வங்களும் அவதிப்படுகின்றனர். கல்வித் தரத்தை பார்த்தோமேயானால் சொல்லிக் கொள்ளும்படி ஒன்றுமே இல்லை. 
ஆனாலும் அமைச்சரோ மைக்கை கண்டாலே மந்திரம் போட துவங்கிவிடுகிறார். நம் தலையெழுத்து அப்படித்தான்!

click me!