தமிழக அரசுதான் அழுத்தம் கொடுக்கணும் - நீட்டுக்கு எதிராக குரல் கொடுத்த  அமெரிக்க  உலக தமிழ் அமைப்பு...

First Published Nov 9, 2017, 7:13 PM IST
Highlights
america world tamil association voice for neet exam issue


நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் தமிழக அரசு சட்டமுன்வரைவை குடியரசுத் தலைவர் ஏற்பதற்காக மாநில அரசும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் அழுத்தம் தரவேண்டும் என அமெரிக்காவிலுள்ள உலகத் தமிழ் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. 

இதுகுறித்து  செய்தியாளர்களிடம் பேசிய உலகத் தமிழர் அமைப்பினர்  நீட் தேர்வின் காரணமாக தன்னுயிரை ஈந்த செல்வி. அனிதாவின் மறைவுக்குப் பிறகு, அமெரிக்காவில் பல்வேறு நகரங்களில் நீட்தேர்வுக்கு எதிராக அமெரிக்கத் தமிழர்கள் தன்னெழுச்சியாகப் போராட்டங்களை நடத்தியதாக தெரிவித்தனர். 

பல ஆண்டுகாலமாக தமிழ்நாட்டு அரசும் கல்வியாளர்களும் மருத்துவக்கல்வி உள்பட கல்விமுறையை ஒன்றிய அரசு துச்சமென மதிப்பதையும் அழிப்பதையும் கடுமையாக எதிர்பதாக குறிப்பிட்டனர். 

தமது மருத்துவக் கல்வியானது தமிழ்நாட்டிலும் உலகெங்கிலும் மிகச்சிறந்த மருத்துவர்களை பல்லாயிரக்கணக்கில் உருவாக்கியிருக்கிறது என்பது மறுக்கமுடியாத உண்மை எனவும் எனவே நீட் தேர்வு முறை நமது தனித்துவமான மருத்துவக் கல்வியையும் சுகாதார முறையையும் அழிக்கக்கூடிய ஒன்றாக இருப்பதாகவே கருதுவதாகவும் தெரிவித்தனர். 

நீட் விவகாரம் தொடர்பாக தமிழ்நாட்டு அரசு சட்டப்பேரவையில் நிறையவேற்றிய சட்டமுன்வரைவு மீது மத்திய அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்காமலிருப்பதாகவும் தமிழ்நாடு-புதுச்சேரி அரசுகளும், இம்மாநிலங்களைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதுகுறித்து வலியுறுத்தாமல் அமைதிகாப்பது விளங்கிக்கொள்ளமுடியாத புதிராகவே இருப்பதாகவும் தெரிவித்தனர். 

எனவே நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் தமிழக அரசு சட்டமுன்வரைவை குடியரசுத் தலைவர் ஏற்பதற்காக மாநில அரசும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் அழுத்தம் தரவேண்டும் எனவும் அமெரிக்கத் தமிழர்கள் உள்பட உலகத்தமிழர்கள் அனைவரும் இவ்விவகாரத்தில் தமிழக மக்களின் உரிமைகளுக்காக துணை நிற்கிறோம் என்பதையும் தெரிவித்துள்ளனர்.  
 

click me!