
2019ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற இருக்கும் பொதுத் தேர்தலில் நம் நாட்டில் செல்லாத ரூ.500, ரூ.1000 நோட்டுகள் முக்கிய பங்கு வகிக்கப்போகின்றன.
ரூபாய் நோட்டு தடை
நாட்டில் கருப்புபணம், ஊழல், கள்ள நோட்டுகள், தீவிரவாதம் ஆகியவற்றை ஒழிக்க, புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என பிரதமர் மோடி கடந்த ஆண்டு , நவம்பர் 8-ந்தேதி அறிவித்தார். அதைத்தொடர்ந்து செல்லாத நோட்டுகளை மக்கள் வங்கிகளிலும், தபால்நிலையங்களிலும் கொடுத்து புதிய ரூபாய்களை பெற்றுச் சென்றனர்.
அப்புறப்படுத்தும் பணி
இந்த செல்லாத நோட்டுகள் ரிசர்வ் வங்கியில் குவிந்து கிடப்பதால், அதை அப்புறப்படுத்துவது பெரிய பணியாக இருக்கிறது. இதை எரித்தால் சுற்றுச்சூழலுக்கு கேடாகும் என்பதால் என்ன செய்வதென்று குழப்பத்தில் இருந்தனர். அப்புறப்படுத்தும் பணியாக கேரளாவின் கன்னூரில் உள்ளகார்ட்போர்டு அட்டை தயாரிக்கும் நிறுவனத்திடம் ரிசர்வ் வங்கி சார்பில் ஒப்பந்தம் செய்யப்பட்டது.
கார்ட்போர்டு தயாரிப்பு
அதன்படி, செல்லாத ரூபாய் நோட்டுகளை சிறு,சிறு துண்டுகளாக வெட்டி அந்த நிறுவனத்திடம்ரிசர்வ் வங்கி கொடுத்துவிடும். அந்த நிறுவனம், மரக்கூழுடன், ரூபாய் நோட்டு கழிவை சேர்த்துகார்ட்போர்டு செய்ய பயன்படுத்திக்கொள்ளும்.
ரிசர்வ் வங்கியுடன் ஒப்பந்தம்
இது குறித்து தி வெஸ்டர்ன் பிளைவுட் நிறுவனத்தின் இயக்குநர் கே.மாயன் முகம்மது கூறுகையில், “ செல்லாத ரூபாய் நோட்டுகளை அப்புறப்படுத்த வழிதெரியாமல் கேரள ரிசர்வ்வங்கி திணறியபோது, எங்கள் நிறுவனம் குறித்த தகவல் அறிந்து தொடர்பு கொண்டு பேசி ஒப்பந்தம் செய்தனர். அதன்படி, ரூபாய் நோட்டுகளை சிறு துண்டுகளாக ரிசர்வ் வங்கி நிர்வாகம் வெட்டிக் கொடுத்து விடுவார்கள். அதை நாங்கள் மரக்கூழுடன் சேர்த்து கார்ட்போர்டு, பிளைவுட் செய்ய பயன்படுத்துகிறோம்.
தென் ஆப்பிரிக்காவுக்கு ஏற்றுமதி
இந்த அட்டைகள், கார்ட்போர்டுகள், பிளைவுட்கள் அனைத்தும் 2019ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடக்கும் பொதுத் தேர்தலுக்காக ஏற்றுமதி செய்யப்படுகிறது. அங்கு நடக்கும் தேர்தல் பிரசாரத்தின் போது தேர்தல் வாசகங்களை எழுதவும், பதாகைகள் தயாரிக்கவும் இது பயன்படுத்தப்படுகிறது. சவூதி அரேபியாவுக்கும் ஏற்றுமதி செய்கிறோம்.
துண்டு துண்டாக வெட்டப்பட்ட நோட்டுகளை பயன்படுத்துவது முதலில் சிரமமாக இருந்தது, ஆனால், எங்கள் பொறியாளர்கள் எளிதாக மக்கும் வகையில் புதிய முறையை கண்டறிந்துள்ளனர்’’ என்று தெரிவித்தார்.