தமிழகத்தில் கூட்டணி மாற்றம்.. நேரம் பார்த்து காத்திருக்கும் ராமதாஸ்.. திமுக மேலிடம் குஷியோ..! குஷி..!

By Selva KathirFirst Published Jul 31, 2020, 10:02 AM IST
Highlights

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக மற்றும் அதிமுகவை சம தூரத்தில் வைத்து சரியான நேரத்திற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் காத்திருப்பது போன்ற ஒரு தோற்றம் உருவாகியுள்ளது.


சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக மற்றும் அதிமுகவை சம தூரத்தில் வைத்து சரியான நேரத்திற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் காத்திருப்பது போன்ற ஒரு தோற்றம் உருவாகியுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பிறகும் கூட அதிமுக – பாமக கூட்டணி உறுதியாகவே இருந்து வருகிறது. கூட்டணியில் வேறு யாருக்கும் தரும் முக்கியத்துவத்தை விட ராமதாசுக்கு அதிகமாகவே முதலமைச்சர் எடப்படி பழனிசாமி வழங்கி வருகிறார். இதற்கெல்லாம் காரணம் இடைத்தேர்தல் வந்தாலும் சரி, பொதுத் தேர்தல் வந்தாலும் சரி பாமகவுடனான கூட்டணி முக்கியம் என்று எடப்பாடியார் நம்புவது தான். இதே போல் ராமாசும் கூட திமுக கூட்டணியில் கிடைக்காத முக்கியத்துவம் அதிமுக கூட்டணியில் பாமகவிற்கு கிடைப்பதாக நம்புகிறார்.

ஆனால் தேர்தல் என்று வந்தால் மக்கள் அதிமுகவை ஏற்பார்களா என்கிற ஒரு சந்தேகம் எல்லோருக்கும் இருப்பதை போல் பாமகவிற்கும் உள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் கடுமையாக பணியாற்றியும் கூட அதிமுக கூட்டணியில் இடம் பெற்று இருந்த பாமக படு தோல்வி அடைந்தது. தருமபுரியில் அன்புமணி ராமதாஸ் அடைந்த தோல்வி கண்டிப்பாக அடுத்த முறை தேர்தல் கூட்டணி விஷயத்தில் ராமதாஸ் யோசிக்க வேண்டும் என்கிற ஒரு எண்ணத்தை ஏற்படுத்தியிருக்கும். இருந்தாலும் கூட கூட்டணி குறித்து முடிவெடுக்க வேண்டிய அவசர அவசியம் பாமகவிற்கு இல்லை.

ஆனால் அண்மைக்காலமாக பாமக நிறுவனர் ராமதாசின் செயல்பாடுகள் திமுகவிற்கு இணக்கமாக செல்ல முயற்சிப்பது போன்று உள்ளது. பெரியார் சிலை கோவையில் காவிச் சாயம் பூசப்பட்டு அவமதிக்கப்பட்ட அடுத்த நிமிடம் ராமதாஸ் கண்டன அறிக்கை வெளியிட்டார். இதே போல் கன்னியாகுமரியில் அண்ணா சிலை பீடத்தில் காவிக் கொடி ஏற்றப்பட்டதையும் ராமதாஸ் ஒரு நொடியும் தாமதிக்காமல் கண்டித்தார். அண்ணா தோற்றுவித்த திமுக, அண்ணா பெயரில் கட்சி நடத்தும் அதிமுக ஆகிய கட்சிகள் கூட இந்த விவகாரத்தை தாமதமாகவே கண்டித்தன.

இதே போல் மத்திய பாஜக அரசு அமல்படுத்தியுள்ள புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக ராமதாஸ் போர்க்குரல் எழுப்பியுள்ளார். அன்புமணி ராமதாசும் புதிய கல்விக் கொள்கையை ஏற்கவே முடியாது என்று கூறியுள்ளார். இப்படி ராமதாஸ் மற்றும் அன்புமணியின் அரசியல் தமிழகத்தில் புது டிராக்கில் பயணிக்க ஆரம்பித்துள்ளது. பெரியார், அண்ணா  சிலை விவகாரத்தில் கண்டன குரல் எழுப்பிய ராமதாஸ் புதுச்சேரியில் எம்ஜிஆர் சிலை அவமதிக்கப்பட்ட போது பெரிதாக கண்டு கொள்ளவில்லை.

இதன் மூலமே சிலை விவகாரத்தில் ராமதாஸ் யாருக்கு சிக்னல் கொடுக்கிறார் என்பதை தெரிந்து கொள்ளலாம். இதே போல் சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிக்கை விவகாரம், புதிய கல்விக் கொள்கை விவகாரங்களில் பாமக மத்திய அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. கிட்டத்தட்ட திமுகவும் இந்த விவகாரங்களில் மத்திய அரசுக்கு எதிரான நிலைப்பாட்டையே எடுத்துள்ளது. இதனால் முக்கிய விஷயங்களில் திமுக – பாமக நிலைப்பாடுகள் ஒரே மாதிரியாக இருக்க ஆரம்பித்துள்ளது. இது எதிர்காலத்தில் கூட்டணி பேச்சின் போது உதவும் என்பதை யாரும் சொல்லித் தெரியவேண்டியதில்லை.

அதிமுக தொகுதிகளை அள்ளிக் கொடுத்தாலும் கூட வெற்றி வாய்ப்பு என்பதை பார்க்கும் போது பாமக திமுகவிற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கும் என்று எதிர்பார்க்கலாம். ஏனென்றால் கடந்த காலங்களில் பாமக அதிக தொகுதிகள் என்கிற நிலைப்பாட்டுடன் இரண்டு கட்சிகளுடனும் மாறி மாறி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. அந்த வகையில் அதிமுக கொடுக்க முன்வரும் தொகுதிகளை திமுக கொடுக்க முன்வந்தால் நிச்சயம் கூட்டணியில் சேர பாமக தயாராகவே இருக்கும் என்கிறார்கள். மேலும் திமுகவும் கூட கூட்டணிக்கு பாமக வருமா என்று வழிமேல் விழி வைத்து காத்திருக்கிறது என்பது அண்மையில் ராமதாஸ் பிறந்த நாளுக்கு ஸ்டாலின் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்து அதனை ட்விட்டரில் பிரகடனம் செய்தது மூலமாகவே தெரிந்து கொள்ளலாம்.

click me!