இதெல்லாம் ஒரு ஆளுநர் உரையா..? ஆட்சிக் கட்டிலில் அமர வாக்குறுதிகளை அள்ளிவீசிய திமுக.. அசால்ட்டு செய்த ஓபிஎஸ்.

By Ezhilarasan BabuFirst Published Jun 22, 2021, 9:23 AM IST
Highlights

ஏழை, எளிய, பாமர மக்களுக்கு பயனளிக்கும் வாக்குறுதிகளாக சமையல் எரிவாயு சிலிண்டருக்கு நூறு ரூபாய் மானியமாக வழங்குகிற திட்டம், நியாய விலை கடைகளில் மாதம் ஒரு கிலோ சர்க்கரை கூடுதலாக தரப்படும் என்கிற திட்டம், உளுத்தம்பருப்பை மீண்டும் வழங்கும் திட்டம் போன்றவை ஆளுநர் உரையில் இடம் பெறாதது மக்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.  

ஆட்சியாளர்களின் கொள்கைத் திட்டங்களை விளக்குவதே ஆளுநர் உரை என்றும், அக்கொள்கை திட்டங்களுக்கு ஏற்ப நிதியை பகிர்ந்தளிக்கும் புள்ளி விவரங்களை கொண்டதே வரவுசெலவுத்திட்டம் என்றும் கூறியவர் பேரறிஞர் அண்ணா அவர்கள்,  பேரறிஞர் அண்ணா அவர்களின் பொன் மொழிக்கேற்ப இந்த ஆளுநர் உரை அமைந்து இருக்கிறதா என்றால் நிச்சயம் இல்லை என அதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு விவரம்:-

16வது தமிழ்நாடு சட்டப் பேரவைக்கு பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் தனது கொள்கைகளை தனது திட்டங்களை தேர்தல் அறிக்கை வாயிலாகவும் பிரச்சாரங்கள் வாயிலாகவும் திமுக அறிவித்தது. அவற்றையெல்லாம் உள்ளடக்கி இந்த ஆளுநர் உரை அமைந்திருக்கிறதா என நான் துருவித்துருவி பார்த்தேன், எனக்கு எதுவும் தென்படவில்லை. அனைத்து தரப்பு மக்களின் நலத்தையும் கருத்தில் கொண்டு பெட்ரோல் விலை லிட்டருக்கு ஐந்து ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 4 ரூபாய் அமைக்கப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

ஆனால் இது குறித்து எந்த தகவலும் ஆளுநர் உரையில் குறிப்பிடப் படவில்லை, ஆனால் ஆளுநர் உரையாற்றுவதற்கு முன்பே பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்பட்டது என்று மாண்புமிகு நிதியமைச்சர் அவர்கள் தெளிவு படுத்தி விட்டார்கள், உண்மை நிலை என்னவென்றால் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் மேலும் டீசல் விலை லிட்டருக்கு 4 ரூபாய் மேலும் உயர்ந்தது என்பது தான் நிதர்சனம். திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு உடனடியாக ரத்து செய்யப்படும் என்று தேர்தல் பிரச்சாரத்தின்போது தெரிவிக்கப்பட்டது, ஆனால் இந்த நிமிடம் வரை நீட் தேர்வு நடைபெறும் என்று மாண்புமிகு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் அவர்கள் தெளிவு படுத்தி விட்டார்கள். ஆளுநர் உரையிலும் தமிழ்நாட்டில் நீட் தேர்வால் மாணவர்கள் பாதிப்படையாமல் இருக்க தேவையான சட்டங்களை நிறைவேற்றி அத்தகைய சட்டங்களுக்கு மாண்புமிகு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற உரிய நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும் என்று கூறப்பட்டுள்ளது.  இதற்கான காலக்கெடு எதுவும் குறிப்பிடப்படவில்லை. இதன் மூலம் ஒரு தெளிவற்ற நிலை காணப்படுவதாக தெரிகிறது.

ஏழை, எளிய, பாமர மக்களுக்கு பயனளிக்கும் வாக்குறுதிகளாக சமையல் எரிவாயு சிலிண்டருக்கு நூறு ரூபாய் மானியமாக வழங்குகிற திட்டம், நியாய விலை கடைகளில் மாதம் ஒரு கிலோ சர்க்கரை கூடுதலாக தரப்படும் என்கிற திட்டம், உளுத்தம்பருப்பை மீண்டும் வழங்கும் திட்டம் போன்றவை ஆளுநர் உரையில் இடம் பெறாதது மக்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. இதேபோல 60 வயதிற்கு மேற்பட்ட முதியோர் உதவித்தொகை 1,500 ரூபாயாக உயர்த்தப்படும் என்ற திட்டம், கூட்டுறவு வங்கிகளில் ஐந்து பவுனுக்கு உட்பட்ட நகை கடன் தள்ளுபடி போன் திட்டம் போன்றவை ஆளுநர் உரையில் இடம் பெறாதது வேதனை அளிக்கக் கூடிய ஒன்று, ஏனென்றால் இவையெல்லாம் மக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்ற திட்டங்கள், மக்களுக்குப் பயன் அளிக்கும் திட்டங்கள், மொத்தத்தில் திமுகவின் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட முக்கியமான திட்டங்கள், கொள்கைகள் இந்த ஆளுநர் உரையில் இடம் பெறாததை பார்க்கும்போது வாக்குறுதிகள் எல்லாம் ஆட்சிக்கட்டிலில் அமர்வதற்காக அள்ளி வீசப்பட்டதோ என்ற எண்ணம் மக்களிடையே ஏற்பட்டிருக்கிறது. மொத்தத்தில் இது ஆளுநர் உரை அல்ல உறுதிப்பாடு இல்லாத குழப்பமான உரை, இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

 

click me!